வெளியாகி 15 நாட்களிலேயே ஓடிடி ரிலீஸ்… மரைக்காயர் படக்குழுவினர் அறிவிப்பு!

0
Follow on Google News

மரைக்காயர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 17 ஆம் தேதி ஓடிடி வெளியீடாக வெளியாக உள்ளது. மலையாள சினிமாவின் வெற்றிக் கூட்டணியான மோகன்லால் & பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம் திரைப்படம், தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தில் மோகன் லாலோடு அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக், சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் ஒரு வருட தாமதத்துக்குப் பிறகு டிசம்பர் 2 ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான மரைக்காயர் திரைப்படம் முன்பதிவு மூலமாகவே 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக மலையாள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. ஆனால் ரிலிஸுக்கு பிறகு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன. திரையரங்குகளிலும் படிப்படியாக கூட்டம் குறைய ஆரம்பித்தது.

இதையடுத்து இப்போது டிசம்பர் 17 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த படம் ஒளிபரப்பப் பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 15 நாட்களிலேயே ஓடிடியில் வெளியாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.