பொதுவாக நம்முடைய ஊர்களில் மழைக்காலம் வந்துவிட்டால் ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீர் நிரம்ப வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் பல இடங்களில் ஏரிகள் தூர்வாரப்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. சில இடங்களில் ஏரிகளுக்குத் தண்ணீர் வரும் கால்வாய்களே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மழை பெய்தாலும் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் நேரடி பாதிப்பு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்தான்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசாங்கம் மட்டுமே அனைத்து ஏரிகளையும் சீரமைக்க வேண்டும் என்று காத்திருக்காமல், பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் இந்தப் பணியில் நேரடியாகப் பங்கேற்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை முதலமைச்சர் விஜய் தொடங்கியிருக்கிறார்.இதற்காக நீர்வளத்துறை சார்பில் ERI என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் மற்றும் குளங்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
இனி ஒரு தொண்டு நிறுவனம் அல்லது தனியார் அமைப்பு, தங்களுடைய பகுதியில் இருக்கும் ஒரு ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்காக அரசுத் துறை அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. ERI இணையதளம் மூலமாகவே தாங்கள் சீரமைக்க விரும்பும் ஏரியைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும். சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளும் இதன் மூலமாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் தடையின்மைச் சான்றிதழ் எனப்படும் NOC வழங்குவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் முன்வரும் அமைப்புகள், அனுமதி கிடைக்காமல் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.
இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியின்போது சுருளி, EFI, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், மேகா பவுண்டேஷன், தன் பவுண்டேஷன் உள்ளிட்ட ஐந்து அமைப்புகளுக்கு முதலமைச்சர் விஜய் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறார். இதன் மூலம் தன்னார்வ அமைப்புகள் ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவதற்கான தொடக்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சமூகப் பொறுப்பு நிதி எனப்படும் CSR நிதியையும் இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். ஏரிகளைத் தூர்வாருவது, கரைகளைப் பலப்படுத்துவது, நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைப்பது, நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.
மொத்தத்தில், ஒரு ஊரில் இருக்கும் ஏரியை அந்த ஊர் மக்களே முன்வந்து சீரமைக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் முயற்சியோடு பொதுமக்களின் பங்களிப்பும் இணைந்தால், தமிழகத்தில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான நீர்நிலைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும்.

