தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டாவின் ஆண் குழந்தைக்கு சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.இதுகுறித்து மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜின் ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை என்று தீர்ப்பு அளித்தது. ஜாய் கிறிஸில்டா மற்றும் அவரது குழந்தையின் பராமரிப்பு பொறுப்பு ரங்கராஜூக்கு உள்ளது என்றும் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியது குறித்த புகாரில் குழந்தைக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக 6.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஜாய் கிறிஸில்டா கூறியிருந்தார்.

தனது கர்ப்ப காலத்தில் ரங்கராஜ் தன்னை ஏமாற்றி முதலில் நடந்த திருமணத்தை மறைத்து தன்னை 2வது திருமணம் செய்ததாகவும் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு அவர் தந்தையாக இருப்பதாக கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த புகார் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்த பதிலும் விளக்கமும் வெளியாகவில்லை.
ஜாய் கிறிஸில்டா அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. அவரும் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜரானார். அப்போது நடந்த விசாரணையில் ஜாய் கிறிஸில்டாவை 2வது திருமணம் செய்ததை ஒப்புக்கொள்கிறேன். அவருக்கு பிறந்த குழந்தைக்கு நான்தான் தந்தை என்று ரங்கராஜ் தெளிவாக மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த ஒப்புதல்தான் மகளிர் ஆணையத்தின் இந்த தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஜாய் கிறிஸில்டாவின் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை தானா என்பதற்கான டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை என்றும் மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மேலும் ஜாய் கிறிஸில்டா மற்றும் குழந்தையின் பராமரிப்பு பொறுப்பு மாதம்பட்டி ரங்கராஜூக்கு உண்டு என்றும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஜாய் கிறிஸில்டா அளித்த புகாரின்படி மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், கர்ப்ப காலத்தில் ரங்கராஜ் தன்னை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாகவும் கூறியிருந்தார். அதன்படி மகளிர் ஆணையம், ஜாய் கிறிஸில்டாவின் கர்ப்ப கால செலவுகள், வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான 6.5 லட்சம் ரூபாய் மாதாந்திர பராமரிப்பு தொகையை ரங்கராஜ் தர வேண்டும் என்று உறுதி செய்தது.
ஜாய் கிறிஸில்டாவுக்கு குழந்தை பிறந்த பிறகு, தந்தை – குழந்தை உறவு உறுதியானதால் பராமரிப்பு பொறுப்பு ரங்கராஜூக்கு உத்தரவாக பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இது ஜாய் கிறிஸ்டிலாவின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விதி என்ற படத்தில் பூர்ணிமாவை நடிகர் மோகன் ஏமாற்றுவதை போல, ஜாய் கிறிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி இருக்கிறார். காலம் மாறினாலும் இன்னும் காட்சிகள் மாறாமல் சில மோசடி ஆண்களிடம் இந்த காலத்திலும் அப்பாவி பெண்கள் ஏமாறுவது வேடிக்கையான வேதனைதான்.

