தற்போது டிவி சேனல்களில் கேபிஒய் பாலா ஒரு முக்கியமாக செலிபிரட்டியாக மாறி இருக்கிறார். திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். வருகிற 5ம் தேதி வெளியாக உள்ள காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் கேபிஒய் பாலா கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். காமெடி ரோலில் பல படங்களில் நடித்த அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேபிஒய் பாலா, தான் சம்பாதிக்கும் வருமானத்தில் ஒரு பெரும் பகுதியை பல்வேறு வகையான உதவிகளுக்காக செலவிடுகிறார். வாகன வசதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி தந்துள்ளார். அவற்றுக்கான பராமரிப்புச் செலவையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் நடத்தி வரும் மாற்றம் என்ற சேவை அமைப்பில் இணைந்து கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லாத குழந்தைகளுக்கு அவர்கள் படிக்க தேவையான கல்வி உதவிகளை கேபிஒய் பாலா செய்து வருகிறார். விவசாயிகளுக்கு தேவையான விவசாய பொருட்களை வாங்கி இலவசமாக தருகிறார். ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட துணை நடிகர் அபினய்க்கு 1 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கினார்.
இதேபோல் பல துணை நடிகர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு 25 ஆயிரம், 50 யிரம் ஒரு லட்சம் ரூபாய் என தன்னால் இயன்ற நிதியுதவி செய்து அவர்களது மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு உதவினார். மழை காலத்தில் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று பண உதவி செய்தார். நிவாரண பொருட்களை வழங்கினார். தற்போது அடுத்தகட்டமாக இலவசமாக ஒரு மருத்துவமனையை கேபிஒய் பாலா கட்டி வருகிறார்.
சென்னை பல்லாவரம் அருகே கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கட்டணம் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்க கேபிஒய் பாலா திட்டமிட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுமானத்துக்காக நடிகர் அமுதவாணன், தனக்கு சொந்தமான பாதி நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இப்போது மருத்துவமனை கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
இலவச மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பீர்கள், எப்படி மருந்துகளை வாங்குவீர்கள் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் அமுதவாணன் அறந்தாங்கி நிஷா தங்கதுரை போன்றவர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யவும் கேபிஒய் பாலாவுக்கு ஆதரவாக பக்கபலமாக முன்வந்துள்ளனர்.
கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் சில முன்னணி நட்சத்திர நடிகர்கள் ஒரு ரூபாய் கூட உதவ நினைக்காத இந்த காலத்தில், மக்களுக்கு சேவை செய்வதே துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே தனது வாழ்க்கை நோக்கமாக கொண்ட ஒரு பண்பான இளைஞராக கேபிஒய் பாலா பல்லாவரத்தில் இப்போது இலவச மருத்துவமனை கட்டி வருகிறார். பிறரிடம் உதவியை வாங்கி நான் மற்றவர்களுக்கு உதவி செய்வது தவறு. அந்த உதவியை மக்களுக்கு அவர்களே நேரடியாக செய்து விடலாம். என் உழைப்பில் எனது வருமானத்தில் மக்களுக்கு உதவுவதே உண்மையான உதவியாக ஆத்ம திருப்தியை எனக்கு தரும் என்று கேபிஒய் பாலா சமீபத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

