பிக்பாஸ் போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருப்பவர்கள் வரம்பு மீறி பேசுவதும் அநாகரீகமாக நடந்துக் கொள்வதும் முகம் சுளிக்க வைக்கிறது. இந்த சீசனை போல ஒழுக்கம் கெட்ட போட்டியாளர்களை இதுவரை நான் பார்க்கவில்லை என்று போன வாரம் பிக்பாஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜூஸ் டாஸ்க் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜூஸ் தயார் செய்து கொடுக்க வேண்டும். அதை நடுவர்களான பார்வதியும் மற்றும் திவாகர் சோதனை செய்து அவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள்.
பிக்பாஸ் நடுவர்கள் திவாகர் மற்றும் பார்வதிக்கு அதிக அளவில் பவர் கொடுத்தார், இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பார்வதி போட்டியாளர்களிடம் தேவையில்லாமல் கேள்வி கேட்டு அவர்களின் கோபத்தை தூண்டிவிட்டு சண்டைக்கு வழி வகுத்தார். அது மட்டுமில்லாமல் எஃப் ஜே மேடையில் அவரை வெறுப்பேற்றியது பிரச்னையின் உச்சமாக இருந்தது. குறிப்பாக இதுவரை அமைதியின் சொரூபமாக இருந்த கலையரசன், டேபிளை தள்ளிவிட்டு கத்தியது எல்லாம் பார்வையாளர்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

தொடர்ந்து பார்வதி திவாகரிடம் நடந்து கொண்டது, தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தலைகாணியை அடித்தது என பெரிய சம்பவம் காத்திருப்பதாகவே பலரும் நினைத்தனர். ஆனால் அத்தனை சண்டைகளிலும் பார்வதி அத்துமீறாமல் தன்னுடைய வார்த்தைகளால் மட்டுமே கோபத்தை காட்டி வந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருப்பது பார்வதியின் குரல்தான். அதனால் வீட்டுக்குள் டிவியே ஓடாவிட்டாலும் பலருக்கு பார்வதி குரல்தான் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால் ஆதிரை ஜூஸ் டாஸ்க்கில் தன்னுடைய சக போட்டியாளரான கானா வினோத்திடம் கோபத்தில் காலை தூக்கி காட்டிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே ஆதிரை ஓவராக அலப்பரை செய்து வருவது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. பலருக்கு அவரது செயல்பாடுகள் சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் தான் கடந்த வாரம் அவரை முகமூடி அணிய வைத்து பிக்பாஸ் தண்டனை கொடுத்தார்.
ஆனாலும் ஆதிரை நடவடிக்கைகளில் எந்தவித மாற்றத்தையும் காண முடியவில்லை என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர். ஏற்கனவே எஃப் ஜே வுடன் ஆதிரை காதல் காட்சிகளை ஓட்டுவதும் சும்மா இருக்கும் அவரை கண்ட கண்ட இடத்தில் தொட்டு தவறாக பேசி வருவதும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து ஆதிரை வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அதுபோன்ற கருத்துகளும் பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்து விமர்சனங்களாக கமெண்டுகளாக வந்துக் கொண்டிருக்கின்றன.
இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களில் ஒரு சிலர் தானாகவே வெளியேறி செல்ல விருப்பம் தெரிவித்து வெளியே சென்றிருக்கின்றனர். அந்த வகையில் மாநகரம் பட நாயகன் ஸ்ரீ யூடியூபர் ஜிபி முத்து இந்த சீசனில் வெளியேறிய நந்தினி போன்றவர்கள் அப்படியே வெளியே சென்றவர்கள்தான். அதே போல் ஒழுங்கு நடவடிக்கையாக நடிகர் சரவணன் பிரதீப் திருநங்கை நமீதா போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள். அந்த வரிசையில் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் வரம்பு மீறி நடந்து கொள்ளும் ஆதிரை மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ரெட் கார்டு கொடுத்து அவரை பிக்பாஸ் வெளியேற்றுவாரா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

