தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டில் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான 4 ஆண்டுகளிலேயே அவர்கள் பிரிந்துவிட்டனர். கடந்தாண்டில் நடிகை சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா 2வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சமந்தா குறித்து நடிகை லட்சுமி மஞ்சு சமீபத்தில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் நாக சைதன்யா குறித்த முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றையும் அவர் எழுப்பியிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணத்துக்கு பிறகும் நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். ஆரம்பத்தில் அதற்கு ஆதரவாக இருந்த நடிகர் நாக சைதன்யா பிறகு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார். அவரது தந்தை நடிகர் நாகார்ஜூனா மற்றும் குடும்பத்தில் இருந்த மூத்தவர்கள், சமந்தா திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதனால் நாக சைதன்யாவும் அந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இந்த விஷயம் நாளடைவில் பெரிய பிரச்னையாக அவர்களுக்குள் வெடித்தது.
ஒரு கட்டத்தில் மனைவி சமந்தாவை இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று நாகசைதன்யா திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஆனால் சினிமாவில் நடிப்பது என்ற உறுதியாக இருந்த நடிகை சமந்தா, சினிமாவா குடும்ப வாழ்க்கையா என்ற கேள்வி வந்தபோது சினிமாவே முக்கியம் என்று கணவர் நாகசைதன்யாவை விட்டு நடிகை சமந்தா உடனடியாக பிரிந்தார். அவரை விவாகரத்து செய்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு மையோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோய் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இதற்காக ஆங்கில மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகளை அவர் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் அந்த நோயுடன் அவர் கடுமையாக போராடினார். பலவிதமான உடல்நல கோளாறுகளை சந்தித்த சமந்தா ஒரு கட்டத்தில் அந்த நோயின் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக மீண்டு குணமடைந்தார்.
அதன்பிறகு நடிகை சமந்தா குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. அதனால் அவர் சில மாதங்கள் படப்பிடிப்பை தவிர்த்து நடிக்காமலும் இருந்தார். பிறகு சிட்டாடல் என்ற இந்தி வெப் சீரிஸில் சமந்தா நடித்தார். இந்த வெப் சீரிஸ் அவருக்கு நல்ல வரவேற்பை இந்தியில் பெற்றுத் தந்தது. ஆனால் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இதற்கிடையே அவர் சினிமா தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை லட்சுமி மஞ்சு ஒரு நேர்காணலில் கூறியதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரின் முன்னாள் மனைவி ஒருவர் இருக்கிறார். அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதற்குப் பிறகு யாரும் அவருக்கு பட வாய்ப்புகள் தருவதில்லை. ஏற்கனவே அவர் கமிட்டாகி இருந்த படங்களும் கைவிட்டு போயின. அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்தால் அந்த நடிகர் எதுவும் நினைத்துக் கொள்வார் என சொல்கிறார்கள்.
ஆனால் நடிகை நடிப்பதற்கு தயாராக தான் இருக்கிறார். ஒரு ஆணுக்கு இதுபோல் நடக்காது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். நடிகை சமந்தாவுக்கு தெலுங்கில் சினிமா வாய்ப்புகள் இல்லை. அதற்கு காரணம் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாதான் இடையூறாக இருக்கிறார் என்று அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

