சினிமாவில் நடிக்க பலரும் ஆசைப்பட முக்கிய காரணம் மிக குறுகிய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகி பெயரும் புகழும் அடைந்து கோடி கோடியாய் பணம் குவித்து ஒரு புகழ்மிக்க மனிதனாய் சமூகத்தில் வாழலாம் என்ற ஆசைதான். அந்த வகையில் நடிக்க வந்து தமிழ் சினிமாவில் பலரும் நடிகர்களாகி பிறகு சில ஆண்டுகளில் காணாமல் போயிருக்கின்றனர்.
சூர்யா நடித்த காதலே நிம்மதி என்ற படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானவர் நடிகர் சத்யன். இவர் கோயம்புத்தூரை அடுத்துள்ள மாதம்பட்டியைச் சேர்ந்த ஜமீன்தார் சிவக்குமாரின் மகன். அதன்பிறகு 2000ம் ஆண்டு இளையராஜா இசையில் உருவான இளையவன் என்ற படத்தில் சத்யன் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் சத்யன் நடித்த இந்த 2 படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை, வரவேற்பை தரவில்லை. அதனால் மீண்டும் காமெடி நடிகராக பல படங்களில் சத்யன் தலைகாட்டினார். முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். இதுவரை 70-க்கும் மேற்பட்ட படங்களில் சத்யன் நடித்திருக்கிறார்.
அதில் நண்பன் துப்பாக்கி நவீன சரஸ்வதி சபதம் சிவா மனசுல சக்தி கிரீடம் உள்ளிட்ட சில படங்களில் சத்யன் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக சத்யன் இருந்தாலும் பெரிய அளவில் அவருக்கு சினிமாவில் வரவேற்பு இல்லை என்பது தான் உண்மை.
நடிகர் சத்யன் ஒரு ஜமீன்தார் வீட்டு பிள்ளை. கோயம்புத்தூர் வட்டத்தில் பிரபலமான ஊர் மாதம்பட்டி. சமையலுக்கு பெயர் பெற்ற ஊராக இருக்கும் இந்த மாதம்பட்டியில் ஜமீன்தான் மாதம்பட்டி சிவக்குமார். சத்யனின் தந்தை. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி. அந்த காலத்தில் இவர்களது பரம்பரை குறுநில மன்னர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மாதம்பட்டி சிவகுமாரின் ஒரே மகன் சத்யன்.
மாதம்பட்டியில் இவர்களது பங்களா மட்டும் 5 ஏக்கரில் இருந்திருக்கிறது. இதைத்தவிர பலநூறு ஏக்கரில் தோப்புகளும் வயல்களும் காடுகளும் இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது எந்த சொத்தும் இல்லை. அனைத்தையும் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. மாதம்பட்டி சிவக்குமாருக்கு சினிமா மீது அளவு கடந்த ஆர்வம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமா நடிகர்களான சிவக்குமார் சத்யராஜ் இருவருமே மாதம்பட்டி சிவக்குமாருக்கு நெருங்கிய உறவினர்கள்தான்.
அதிலும் மாதம்பட்டி சிவகுமாரின் அத்தை மகன்தான் நடிகர் சத்யராஜ். அதனால் வீட்டின் எதிர்ப்பை மீறி சினிமாவில் நடிக்க வந்த சத்யராஜூக்கு மாதம்தோறும் பணம் அனுப்பி உதவியவர் மாதம்பட்டி சிவகுமார், பின்னாளில் மாதம்பட்டி சிவகுமார் சினிமா தயாரிப்பாளராக அவரே சில படங்களையும் தயாரித்தார். அதில் பல படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றன. அதன்பின் ஒவ்வொரு சொத்துக்களையும் விற்றுவிட்டனர்.
ஒரு கட்டத்தில் தன் ஒரே மகன் சத்யனை, மாதம்பட்டி சிவக்குமார் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அவரே தயாரிப்பாளராகி இளையவன் என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படி எதிர்பாராமல் தொடர்ந்த தோல்விகளால் நஷ்டத்தை சந்தித்த மாதம்பட்டி ஜமீன் குடும்பம், தங்களிடம் இருந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்றுள்ளது.
இந்நிலையில் மாதம்பட்டி சிவகுமார் மறைந்த நிலையில், கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன் மாதம்பட்டியில் இருந்த தனது பங்களாவையும் நடிகர் சத்யன் விற்றுவிட்டு சென்னையில் குடியேறிவிட்டார். ஒரு காலத்தில் மாதம்பட்டியில் ஜமீனாக அந்த ஊர் மக்களால் குட்டி ராஜா என்று அழைக்கப்பட்ட நடிகர் சத்யன், இன்று பூர்வீக சொத்துக்களை எல்லாம் இழந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்வதையே தவிர்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.