நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்தாலும் அவர் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் நடிகர் அஜீத் குமார் வெளிநாடுகளில் நடந்துவரும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டிருக்கிறார். துபாய் பெல்ஜியம் இத்தாலி பிரிட்டன் ஸ்பெயின் என பல நாடுகளில் கடந்த 10 மாதங்களாக நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்று வருகிறார்.
அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் அவர் இருக்கிறார். இதற்கிடையே அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பெருமிதமாக கூறியிருக்கிறார். ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடந்துவரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. இதற்கிடையே ஒரு தனியார் ஊடகம் ஒன்றில் நேற்று நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன்.

எனவே விளையாட்டு மற்றும் இந்திய திரைப்படத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒத்த எண்ணம் கொண்டவர்களை நான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல வழிகள் உள்ளன. அதற்கு மோட்டார் விளையாட்டுகளை ஒரு தளமாக பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்படுகின்றன மற்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.
பெரிய அளவில் சர்வதேச பார்வையாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம். உதாரணமாக இன்று இந்தியாவில் கொரியா படங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அதேபோல் இந்திய படங்களும் அதே மாதிரியான வரவேற்பை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பிரபலமாக உள்ளன என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் போஜ்புரி போன்ற மற்ற அனைத்து மொழி படங்களையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
எனது ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் பந்தயத்தை பார்க்க முயற்சி செய்கிறார்கள். இது துபாயில் ஸ்பா – ஃபிராங்கோர் சாம்ப்ஸ் மற்றும் ஜெர்மனியில் உள்ள நர்பங்கில் நடந்தது. அடுத்த தொடரில் இருந்து இந்திய சினிமாவை விளம்பரப்படுத்த நான் திட்டமிட்டுள்ள காரில் இந்திய சினிமா இருக்கும். 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பாளர் நாங்கள்.
பொழுதுபோக்கும் விளையாட்டும் எப்போதும் வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகின்றன. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. கோவித் 19 காலத்தில் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். மக்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு தான். எனவே திரைப்படத் துறையில் ஒரு பகுதியாக நான் இருப்பதை மிகவும் பாக்கியமாக உணர்கிறேன்.
கடந்த 33 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் நான் பணியாற்றி வருவதால் இதையெல்லாம் என்னால் செய்ய முடிந்தது. இற்கு காரணம் அன்பும் நல்ல எண்ணமும் என்று நடிகர் அஜீத்குமார் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். வழக்கமாக ஒரு நடிகர் சினிமாவில் நடித்து உச்ச நட்சத்திரமாக மாறினால் கடைசியில் அவரது இலக்கு சினிமாவை விட்டு அரசியலாக தான் இருக்கிறது. சமீபத்திய உதாரணம் நடிகர் விஜய். இப்போது தவெக கட்சி தலைவராக மாறியிருக்கிறார். ஆனால் அஜீத்குமார் நட்சத்திர விளையாட்டு வீரராக மாறி தனித்துவமாக தமிழகத்தின் பெருமையாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

