சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் போது அஜீத்குமார் பேசிய சில கருத்துக்கள் திரித்து சொல்லப்பட்டதால், அவர் விஜய்க்கு எதிராக பேசி விட்டதாக ஒரு மாயை தோற்றம் ஏற்பட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக மீண்டும் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஜீத்குமார் தெளிவான விளக்கம் தந்துள்ளார்.
அதில் அஜீத்குமார் கூறியதாவது, நான் எப்போதும் விஜய்க்கு நன்மையே நினைக்கிறேன். அவரை வாழ்த்தியிருக்கிறேன். நான் பேசியதை அவருக்கு எதிராக திரிப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். இதற்கு முன்பு விஜய் குறித்து அஜீத்குமார் எப்போதுமே மரியாதையாக பேசி வந்துள்ளார். தொழில்ரீதியான போட்டி இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் இருவரும் ஒருவருக்கொருவர் நன்மையை விரும்பி நட்புறவை பேணுவதாகவும் சொல்லப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விழாக்களில் கலந்துக்கொள்வதை கட்டாயமாக தவிர்த்து வரும் நடிகர் அஜீத்குமார், ஊடகங்கள் தன் எண்ணங்களை பிரதிபலிப்பதில் உள்ள சிக்கல் குறித்தும் இந்த நேர்காணலின் போது வருத்தம் தெரிவித்திருக்கிறார். என்னுடைய நல்ல எண்ணங்களை சில ஊடகங்கள் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. நாம் நச்சு கலந்த ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்று அஜீத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய இந்த பேட்டி 10, 20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவிடும் என்றும் தனது கருத்துக்களின் ஆழத்தை அஜீத்குமார் அதில் பதிவு செய்திருக்கிறார். அடுத்து அரசியல் மற்றும் சமூக போராட்டங்கள் குறித்தும் தன் கருத்தை அஜீத்குமார் பதிவு செய்திருக்கிறார். சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.
அதேபோல மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க அரசியல் கட்சிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் உள்நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது போல சில போலி சமூக ஆர்வலர்களும் இங்கே இருக்கிறார்கள்.
அதுபோன்ற போலிகள் செய்யும் மூளைச்சலவையிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அஜீத்குமார் எச்சரிக்கை செய்திருக்கிறார். மேலும் இந்த நேர்காணலில் தனது பூர்வீகம், அடையாளம் குறித்தும் அவர் உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார். உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என நினைத்தால் என் திரைப்படங்களை பாருங்கள். என் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் பல ஆண்டுகளாக இதைச் சொல்லி வருகிறேன்.
என் படத்தை பாருங்கள் என்று எப்போதும் நான் வற்புறுத்த மாட்டேன். அதேபோல் அரசியலுக்கு வந்து நான் ஓட்டு கேட்டு வரமாட்டேன். எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்றும் தன் அரசியல் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். என்னை பிடிக்காதவர்கள் எப்போதும் நான் ஒரு வேற்று மொழிக்காரன் என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். என் பூர்வீகம் பற்றி பேசுகிறார்கள்.
ஒரு நாள் வரும். அதே நபர்கள் ஒருமித்த குரலில் என்னை தமிழன் என்று அழைப்பார்கள் என்றும் ஆவேசமாக அஜீத்குமார் அதில் கூறியிருக்கிறார். இந்த கார் ரேஸ்களில் சாதித்து இந்த நாட்டுக்கும் இந்த மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என்று நம்புகிறேன். அதற்காக என் உடலையும் முழு ஆன்மாவையும் அர்ப்பணிக்கிறேன். என் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று அஜீத்குமார் உணர்ச்சிபூர்வமாக கூறியிருக்கிறார்.

