தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவிக்கும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அஜீத்குமார். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி படங்கள் திரைக்கு வந்துவிட்டன. இதில் விடாமுயற்சி படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் குட்பேட் அக்லி படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து தனது அடுத்த படமான ஏகே 64வது படத்தையும் இயக்கும் வாய்ப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே வழங்க அஜீத்குமார் தானாக முன்வந்துவிட்டார். கடந்த 8 மாதங்களாக வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜீத்குமார், வருகிற நவம்பரில் தனது 64வது படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். 4 மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து விட்டு 2026ம் ஆண்டில் மார்ச் மாதம் துவங்கும் கார் பந்தயங்களுக்கு மீண்டும் சென்று விடுவார்.

இதற்கிடையே ஏகே 64 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 300 கோடி முதல் ரூ. 350 கோடி என்ற நிலையில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில், ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் துவங்கியது. ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் ஸ்டோரி டிஸ்கஷனில் தற்போது இருந்து வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா செய்திருக்கிறார். இப்போதைய சூழலில் கோலிவுட்டில் வெற்றிப் படங்கள் என்பதே குதிரை கொம்பாக மாறி வருகிறது. ரஜினி நடித்த கூலி படமே பலத்த அடி வாங்கி விட்டது. மணிரத்னம், கமல் காம்போவில் வெளியான தக்லைஃப் படமும் ஓடவில்லை.
மதராஸி படத்துக்கும் இன்னும் தமிழ்நாடு தியேட்டர் உரிமம் விற்பனை ஆகாமல் இருந்து வருகிறது. மொத்தமாக பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கவே தயாரிப்பாளர்கள் பயப்படும் அளவுக்கு தொடர்ந்து காட்டுமொக்கை படங்களாக வந்துக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம் மிகப்பெரிய வசூலை அள்ளுமா என்பது சந்தேகம்தான்.
300 கோடி 350 கோடி ரூபாய் கடன் வாங்கி, இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ஏகே 64 படத்தை எடுத்தால் போட்ட பட்ஜெட்டை திரும்ப எடுக்க முடியுமா, கடனை திருப்பி செலுத்த முடியுமா, வட்டி கட்ட முடியுமா என்ற குழப்பமும் சந்தேகமும் தயாரிப்பாளர் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை தன்னால் தயாரித்து ரிலீஸ் செய்து விட முடியுமா என்று இப்போது ராகுல் தயங்குகிறார். அதனால் ஏகே 64 படத்தில் இருந்து விலக நினைக்கிறார்.
அதனால் தேவையின்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஏகே 64 படத்தை தயாரிப்பதில் இருந்து அவர் பின்வாங்கி விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் எதுவும் வந்தால் அந்த நிறுவனத்துடன் கைகோர்க்கவும் ராகுல் தயாராக இருக்கிறார். ஆனால் ஏகே 64 படத்தை அஜீத்குமாரே மறைமுகமாக தயாரிக்க இருப்பதாகவும், ராகுல் மேற்படி வேலைகளை செய்து கொடுக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
ஆனால் அஜீத்குமாரை பொறுத்த வரை படத்தில் நடிப்பது, சம்பளம் வாங்குவது மட்டுமே அவரது இலக்காக எப்போதும் இருக்கும். அவரது படத்தின் பிரமோசனுக்கு கூட வராமல் தவிர்ப்பவர். ஒரு படத்தை தயாரித்தால் அதில் எத்தனையோ விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. அதனால் நிச்சயமாக இந்த படத்தை அஜீத்குமார் நேரடியாகவோ மறைமுகமாகவோ தயாரிக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

