அசைவ உணவால் 2030க்குள் உலகம் பேரழிவுக்குள்ளாவது நிச்சயம்..! திடீர் சென்னைமழை ஒரு துளிமாதிரி.. எச்சரிக்கும் கவிஞர் தாமரை..

0
Follow on Google News

கவிஞர் தாமரை தெரிவித்துள்ளதாவது, எந்த உயிரையும் வதைக்கக் கூடாது என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம். அது ஆடு, மாடு, கோழி, பன்றி , பசு, குதிரை, யானை , குரங்கு, நாய், பூனை, சிட்டுக்குருவி…… அனைத்துக்கும் பொருந்தும். கருணை என்னும் பெருவெள்ளம் – அதுவே அடிப்படை. ஆறறவு படைத்த நாம் ஐந்தறிவு, நான்கறிவு உயிர்களிடத்தில் நியாயமாக நடந்து கொள்ளக் கடமைப்பட்டவர்களல்லவா ??.

நீ இசுலாமியரைக் கேட்க மாட்டாயா , நீ தமிழன் பண்பாட்டைச் சீர்குலைப்பாயா , நீ மலையாளியை எதிர்ப்பாயா, நீ கிறிஸ்தவரைக் குறைகூறி விடுவாயா , ஓ நீ மேல்சாதிக்காரியா இத்யாதி இத்யாதி…. காரணமாகத்தான் இவற்றிற்கெல்லாம் நான் பதில் கூறுவதில்லை. விதண்டாவாதங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கும் குழந்தைத்தனமான எதிர்வினைகளுக்கும் பதிலளிக்க மாட்டேன். ஒரு தனிப்பட்ட செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எந்த விதத்திலும் உயிர்வதை கூடாது என்ற கொள்கை உள்ளவள். வாழ்நாள் முழுக்க மரக்கறி உணவு மட்டுமே உண்டவள்.உண்பவள். தோல், பட்டு போன்ற, விலங்குகளைத் துன்புறுத்திப் பெறப்படும் எந்தப் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை. அழகு சாதனப் பொருட்கள் உட்பட. ஓர் உயிர் மேல் அன்பு காட்டுவதற்கு ‘தமிழனா’கத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதில் மொழிப்பற்று, இனப்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று ,வர்க்கப்பற்று – எதற்கும் தொடர்பில்லை.

வெறும் மரக்கறி உண்ணியாக (Vegetarian) இருந்த நான், பால்/பால்பொருட்கள் சார்ந்த உணவுக்காகவும் விலங்குகள் கற்பனைக்கெட்டாத அளவு துன்புறுத்தப்படுவதை உணர்ந்த கணத்திலிருந்து அவற்றையும் பயன்படுத்தாத ‘நனிசைவ’ நிலைக்கு (Vegan) மாறிவிட்டேன். ஒன்றும் நட்டமில்லை. நம் நாச்சுவையை விடவும் விலங்குகளின் துன்பக்கதறல் பெரியது ! தவிரவும் என்னைப்போலவே இதுபற்றி அறியாமல் சைவ/அசைவ உண்ணிகளாகத் தொடரும் பலருக்கும் உண்மைநிலையை எடுத்துரைத்து வருகிறேன்.

உங்களுக்கெல்லாம் தெரியுமா – காலநிலை மாற்றம்/புவிவெப்பமயமாதல் எனும் உலகளாவிய ஆபத்துக்கு, இந்த ‘அசைவவுணவும் விலங்கு வேளாண்மையும்’தாம் பெரும்பான்மைக் காரணங்கள் என்று ??? 2030 க்குள் குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் உலகம் பேரழிவுக்குள்ளாவது நிச்சயம். நான் சொல்லவில்லை, அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். நேற்றைய திடீர் சென்னைமழை ஒரு துளிமாதிரி !.

இனி வரும் காலங்களில் அரசாங்கங்களே இவற்றை எடுத்துச் சொல்லும் நிலை வரும். 2022 க்குள் நுழைய இருப்பவர்கள் புத்தாண்டுக்கு ஏதேனும் தீர்மானம் எடுப்பதாக இருந்தால் நனிசைவத்தை தேர்ந்தெடுக்கலாம். உடலுக்கும் உள்ளத்துக்கும் உலகநலத்துக்கும் உகந்தது.