சமூக வலைதளத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி.? தேசிய பெண்கள் ஆணைய தலைவர் பதில்.!

0
Follow on Google News

இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது, சைபர் மிரட்டல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறினார். பெண்களுக்கான சைபர் பாதுகாப்பு’ என்ற இணைய வழி கருத்தரங்கை சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து, கோவை மண்டல மக்கள் தொடர்பு கள அலவலகம் நடத்தியது.

இதில் துவக்கவுரை நிகழ்த்திய தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் திருமதி. ரேகா சர்மா, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் இணையதளம் நமது வாழக்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, அதன் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது’’ என்றார். இணையதளம் அதன் பயன்களால் நமது வாழ்க்கையை எளிதாக்கியுள்ள போதிலும், தவறான பயன்பாட்டால் தனிநபர் பாதுகாப்புக்கு குறிப்பாக பெண்களுக்கு அச்சுறுத்தல் போன்ற சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பொது ஊரடங்கு காலத்தில், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட குடும்ப வன்முறைகள் அதிகரித்தது, தேசிய பெண்கள் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மூலம் தெரியவந்தது என திருமதி. ரேகா சர்மா கூறினார். இணையதளம் பெண்களை பல வழிகளில் மேம்படுத்தியுள்ளது. அவர்களால் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெற முடிகிறது. இது இணைய யுகத்தின் நேர்மறையான விஷயங்களாகும்.

மற்றொரு பக்கம், சைபர் உலகில் பெண்கள் குறிவைக்கப்படுவதும் அதிகரிக்கிறது. சைபர் சட்டங்கள் பற்றி பலர் அறியாமல் உள்ளனர். சில நேரங்களில் காவல் துறையினரும், புதிய சவால்களை சந்திக்கின்றனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமங்கள் உள்ளதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதிலும் சிரமங்கள் உள்ளன.

சமூக இணையதளங்களில் ஆபாச படங்கள் மற்றும் தகவல்களை அனுப்புவது, படங்களில் உருவத்தை மாற்றுவது, குறும்புத்தனமான தொடர்புகளை அனுப்புவது போன்ற செயல்கள் அதிகரிக்கின்றன. பெரும்பாலான நேரங்களில், ஆன்லைன் தொந்தரவுக்கு ஆளான பெண்கள், அவர்களுக்கு தெரிந்த நபர்களாலேயே, உறவு மோசமாகும் போது, தொந்தரவு செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் 2021 அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு நன்றி. இதன் மூலம் கூகூள், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர முக்கிய சமூக ஊடகங்கள், கூடிய விரைவில் தவறான உபயோகத்தை தடுப்பதற்கு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, சுய கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சைபர் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிப்பதில், காவல்துறையுடன், தேசிய பெண்கள் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்படுவதாக திருமதி. ரேகா சர்மா கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளில், பேஸ்புக் மற்றும் சைபர் அமைதி அமைப்பு ஆகியவற்றுடன் தேசிய பெண்கள் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பெண்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு சமூக இணையதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சியை அளித்து வருகிறது.முதல் ஆண்டில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்தாண்டுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு தேசிய பெண்கள் ஆணையம் பயிற்சி அளிக்கும்.

3வது கட்டப்பயிற்சி அகில இந்திய அளவில் தொடங்கப்படவுள்ளது. பொதுவாக, பெரும்பாலான பெண்கள் மற்றும் மாணவிகள், சமூக ஊடகங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை அறியாமல் உள்ளனர் என திருமதி. ரேகா கூறினார். தனிப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை சமூக ஊடங்களில் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றும், அப்போதுதான், அதை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது என்றும் இந்த இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முன், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அது பற்றிய அனைத்து விஷயங்களையும் பெண்களும், மாணவிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இணையதளம் போதிய பயன்களை அளித்தாலும், அதன் பாதகங்களுக்கு நாம் இரையாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எந்தவித தொந்தரவுகள் ஏற்பட்டாலும், அது குறித்த புகார்களை உள்ளூர் காவல்துறை, சைபர் குற்றப் பிரிவு மற்றும் தேசிய பெண்கள் ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

சைபர் குற்றங்களை விசாரிப்பதில், இந்தியாவின் முதல் பெண் விசாரணையாளரான திருமதி. தன்யா மேனன் பேசுகையில், நமது வாழ்க்கையை சிறப்பாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கு உருவாக்கப்பட்ட உபகரணம்தான் இணையதளம்.ஆனால், அதன் அடிப்படையை அறியாமலேயே, தற்போது பலர் இணையளத்தை பயன்படுத்துகின்றனர். இந்த தொழில்நுட்பத்தை நல்லது அல்லது தீய விஷயங்களுக்கு பயன்படுத்துவது தனிநபரின் நோக்கத்தை பொறுத்தது’’ என்றார்.

சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஓடிடி தளம் போன்றவற்றுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த புதிய விதிமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.போதைப் பொருள் கடத்தல், மனித கடத்தல், போன்ற குற்றங்கள் இணையதளத்தில் ஆரம்பித்து மக்களை உடல் ரீதியாக பாதிப்பதில் முடிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் குறி வைக்கப்படுவதால், சமூக ஊடகங்களில் தங்களை வெளிப்படுத்தும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.