ரூ.4 லட்சம் லஞ்சம்.! பெண் இன்ஸ்பெக்டரை கைது செய்த சிபிஐ..! திருப்பூரில் நடந்த சம்பவத்தால் பீதியில் மற்ற அதிகாரிகள்.!

0
Follow on Google News

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக திருப்பூர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இபிஎப்ஓ) அமலாக்க அதிகாரியாக பணி புரியும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் தனியார் நபர்கள் இருவரை சிபிஐ கைது செய்தது. திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இபிஎப்ஓ சட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளது.

இப்பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த நபர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோரிடம் திருப்பூர் இபிஎப்ஓ அமலாக்க அதிகாரி( ஆய்வாளர்) லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிபிஐ அதிகாரிகள், லஞ்சம் வாங்கும் பெண் ஆய்வாளரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். லஞ்சம் கொடுத்து விட்டு தனியார் நிறுவன நபர்கள் இருவரும் வெளிவரும்போது, சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

பெண் ஆய்வாளர் அறையில் நடந்த சோதனையில் சுமார் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர், கோவை, சென்னை உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெண் ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.6.10 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து இபிஎப்ஓ பெண் ஆய்வாளர் மற்றும் தனியார் நிறுவன நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, கோவையில், சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி முன் இன்று ஆஜர்படுத்தினர். இதுதவிர மற்றொரு அதிகாரி அறையில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக மேலும் விசாரணைகள் தொடர்வதாக சிபிஐ தெரிவித்துள்ளது.