ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே! ‘பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?’ ஸ்டாலின் பேச்சு.!

0
Follow on Google News

“பேரு வெச்சியே – சோறு வெச்சியா என்று கேட்பது போல, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவுமின்றி மயிலாடுதுறை மாவட்டம் என பெயர் மட்டும் வைத்தால் போதுமா?” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் அக்கட்சி தொண்டர்களிடம் பேசினார் மேலும் அவர் பேசுகையில், திமுக நடத்திய மும்முனைப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கைக்குழந்தையாக இருந்த என்னை, எனது தாயார் தயாளு அம்மையார் அவர்கள், திருச்சிக்கு தூக்கிச் சென்று கலைஞரிடம் காட்டினார்கள். குடும்ப அரசியல் என்று குதர்க்க எண்ணத்தோடு இன்று சிலர் பேசித் திரிகிறார்களே, அவர்களுக்குச் சொல்வேன், இது குடும்பம் குடும்பமாகச் சேர்ந்து இயக்கம் வளர்த்த கட்சியப்பா என்பது தான் அவர்களுக்கு நான் சொல்லும் பதில்!குடும்பம் குடும்பமாகப் பாடுபட்டோம்! குடும்பம் குடும்பமாகப் போராடினோம்! குடும்பம் குடும்பமாகச் சிறைப்பட்டோம்! குடும்பம் குடும்பமாகச் சித்திரவதைப் பட்டோம்! அதனால் தி.மு.க. என்பது குடும்பக் கட்சி தான்! பல்வேறு குடும்பங்களின் கட்சிதான்!

புதிய பொய் தான் மினி கிளினிக். இது மினி பொய் அல்ல. பெரிய பொய். புதிய மருத்துவர்களை வேலைக்கு எடுக்கவில்லை. புதிய செவிலியர்களை வேலைக்கு எடுக்கவில்லை. ஆனால் புதிய மருத்துவமனையை உருவாக்கி விட்டதாகத் திறப்பு விழா நடத்தி வருகிறார் பழனிசாமி. ஆரம்ப சுகாதார நிலையத்தை இப்படி மாற்றிவிட்டு அதுதான் இது என்கிறார் பழனிசாமி. கவுண்டமணி – செந்தில் ஆகியோரின் காமெடி போல, இன்னொரு வாழைப்பழம் எங்கேன்னா? அதுதாண்ணே இது என்பது போல மக்களை மடையர்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி!

மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் தராமல் தேர்தல் வருவதால் தனது சுயநலத்துக்காக கொடுக்கிறார். அரசாங்க பணத்தை தனது கட்சியின் நன்மைக்கு பயன்படுத்துகிறார். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே! – என்று சொல்வார்கள். ஒருவன், பக்கத்து வீட்டுக்கு விருந்துக்கு போனானாம். அங்கே சமையல் பரிமாறியது அவனது மனைவியாம். கணவரைப் பார்த்ததும் நெய்யை அதிகமாக ஊத்தினாராம் மனைவி. அதுதான் ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே! அதுமாதிரி அரசாங்கப் பணத்தை எடுத்து அதிமுகவின் நன்மைக்காக செலவு செய்து, ஏதோ தாராள பிரபுவைப் போல தன்னைக் காட்டிக் கொள்கிறார் பழனிசாமி!

இன்றைய தினம் காலையில் அவசர அவசரமாக மயிலாடுதுறை மாவட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி! புதிய மாவட்டம் உதயமானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்பட வேண்டாமா? சும்மா பேர் வைத்தால் போதுமா? ‘பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?’ என்று கேட்பார்கள். அது போல ஒரு முதலமைச்சர் நடந்து கொள்ளலாமா? என ஸ்டாலின் பேசினார்.