தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபோது, அது தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட அரசியல் இயக்கமாகவே பலரும் கருதினர். ஆனால் சமீபத்தில் நடைபெற்று வரும் தவெக நடவடிக்கைகள் மாநில எல்லைகளைத் தாண்டி, நாடு முழுவதும் கட்சியின் அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, வட இந்திய மாநிலமான பீகாரில் கட்சியின் ஆதரவு தளத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல், விஜய்யின் திரைப்படங்களை விரும்பும் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் சமூகநல நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டின் மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் மொழியில் கட்சியின் கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து, அங்குள்ள மக்களிடம் நேரடியாக செல்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
அதேபோல், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மும்பை நகரிலும் கட்சியின் நிர்வாக அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு வாழும் ஏராளமான தமிழர்களையும், விஜய் ரசிகர்களையும் ஒரே தளத்தில் இணைத்து அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்துடன் அலுவலகம் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதோடு மட்டும் இல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளிலும் கட்சியின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த மாநிலங்களில் ஏற்கனவே விஜய்க்கு உள்ள ரசிகர் ஆதரவை அரசியல் ஆதரவாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த அனைத்து நகர்வுகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது, தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டுக்குள் மட்டுமே செயல்படும் ஒரு அமைப்பாக இல்லாமல், தேசிய அளவில் தனது அடையாளத்தை உருவாக்க முயற்சித்து வருவதாக அதன் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். சமூக ஊடகங்கள் முதல் தரைமட்ட அமைப்பு பணிகள் வரை பல்வேறு தளங்களில் இந்த விரிவாக்க முயற்சிகள் கவனம் ஈர்த்து வருகின்றன.
இவ்வாறு மாநில எல்லைகளைத் தாண்டி பல பகுதிகளில் தனது இருப்பை பதிவு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் வெற்றிபெற்றால், எதிர்கால இந்திய அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் நோக்கர்களிடையே உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் தவெகவை தனித்துவத்துடன் வளர்க்க வேண்டும் என்றால், ராகுல்காந்தியை முன்னிறுத்தி பின்னால் சென்றால் தவெக டம்மியாகிவிடும், விஜய்யை முன்னிறுத்தி தனித்துவத்துடன் கட்சியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும், எதிர் காலத்தில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற திட்டமும் தவெக கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது.

