கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 15-ஆம் தேதி விஜய் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
அன்றைய தினமும் அவரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விஜயை மீண்டும் விசாரணைக்கு சிபிஐ அழைத்ததற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய வீடியோ ஆதாரங்களை அழிக்க விஜய் முயற்சி செய்யப்பட்டதாக சிபிஐ கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகளை முதலில் அழிக்க விஜய் உத்தரவிடப்பட்டதாகவும், ஆனால் அந்த வீடியோக்களை சிபிஐ மீட்டெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சுமார் 3 மணி நேரம் நீளமான பிற காட்சிகளும், விஜய் பயணித்த வாகனத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் அழிக்க முயற்சிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் கலந்துகொண்ட போது மற்றும் வாகனத்தின் மீது நின்றபோதும், அங்கிருந்த நெரிசல் நிலை குறித்து விஜய்க்கு தெளிவான புரிதல் இருந்ததாக சிபிஐ கருதுகிறது. எனவே, “தனக்கு எதுவும் தெரியாது” என்ற விஜய் விளக்கத்தை சிபிஐ ஏற்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், பல முக்கிய ஆதாரங்களை பொதுமக்கள் அல்லது ஊடகங்களுக்கு தெரியாமல் மறைக்க விஜய் முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவே விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தன்று எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கிடையில், “ஜனநாயகன்” திரைப்பட படப்பிடிப்பிற்காக கரூர் கூட்டம் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் சிபிஐ விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகைப்பட ஆதாரங்களுடன் விஜயிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில், பேரணியின் போது விஜய்யின் வாகனம் காவல்துறையினரால் ஒதுக்கப்பட்ட இறுதி நிறுத்தப் புள்ளியை தாண்டி முன்னேறிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வரைபடத்தின்படி, வாகனம் கூட்டத்திற்கு குறைந்தது 20 மீட்டர் முன்பாகவே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த எல்லையை மீறி வாகனம் கூட்டத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்ததே, அங்கு நிலவிய தள்ளுமுள்ளு மற்றும் திடீர் நெரிசலுக்கு முக்கியக் காரணமாக இருந்ததாக சிபிஐ சந்தேகிக்கிறது.
இந்த விசாரணையில் மற்றொரு முக்கிய தகவலாக, நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் “ஜனநாயகன்” திரைப்படத்திற்காக விஜய்யின் குழுவினர் காட்சிகளைப் படமாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த படப்பிடிப்புக்காகவே நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வாகனம் இயக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது
கூட்டங்களில் சினிமா கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களையும் காட்டி விசாரணை நடைபெற்றதாகவும், இது தொடர்பாக “ஜனநாயகன்” படக்குழுவினரிடமும் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

