தமிழக அரசியலில் தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறியிருப்பது டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தான். குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் வருவாயை மையமாக வைத்து மிகப்பெரிய அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களை அதிரவைத்துள்ளன.
மாதந்தோறும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வெளியே வசூலிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இப்படி திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இந்த நடைமுறை இருந்திருந்தால், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய வருவாய் இழப்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தாண்டும் என்ற கணக்குகளும் தற்போது பேசப்பட்டு வருகின்றன.

அதாவது கடந்த ஆட்சிக் காலத்தில் மாதந்தோறும் “கட்சி நிதி” என்ற பெயரில் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு அதிகாரப்பூர்வமற்ற பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் இதானால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு ரூ.3,600 கோடியை எட்டியிருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.
இதையடுத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு டாஸ்மாக் நிர்வாகத்தை முழுமையாக சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இனி டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் நேரடியாக அரசின் கருவூலத்திற்கே செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் அமைப்பில் ஒரு மதுபான பாட்டில் கொள்முதல் செய்யப்படும் தருணத்திலிருந்து அது விற்பனை செய்யப்பட்டு பணம் வசூலிக்கப்படும் வரையிலான அனைத்து நிலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கொள்முதல் நடைமுறை, கிடங்கு நிர்வாகம், சரக்கு போக்குவரத்து, சில்லறை விற்பனை, பண வசூல் முறை, காலி பாட்டில்கள் திரும்ப பெறப்படும் நடைமுறை என ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளும் தற்போது விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக அமைப்பிற்குள் வேரூன்றியிருந்ததாக கூறப்படும் அதிகாரப்பூர்வமற்ற வசூல் நடைமுறைகளை முற்றிலுமாக அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வழக்கமாக இருந்து வந்த பல நடைமுறைகள் மாற்றப்பட உள்ளன. ஒவ்வொரு வருவாயும், ஒவ்வொரு பரிவர்த்தனையும், ஒவ்வொரு கணக்கும் முழுமையாக பதிவாகும் வகையில் புதிய நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வருவாய் கசிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கடந்த கால பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக டாஸ்மாக் துறையை நிர்வகித்த முக்கிய பொறுப்பாளர்கள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் திமுக ஆட்சி காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நிர்வாக முடிவுகள் அனைத்தும் ஆய்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் காரணமாக டாஸ்மாக் விவகாரம் வெறும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையாக மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரமாகவும் மாறியுள்ளது. அடுத்த கட்ட விசாரணைகளில் என்னென்ன தகவல்கள் வெளியாகப் போகின்றன, யார் யார் சிக்கப் போகிறார்கள், எவ்வளவு பெரிய அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

