எடப்பாடி பழனிசாமி மீது ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழல்.! சாட்டையை சுழற்றுகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.!

0
Follow on Google News

2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சரான பிறகும் அந்தத் துறையை மற்றவர்களுக்கு விட்டுத் தராமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம் நெடுஞ்சாலைத் துறை கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் காமதேனுவாக திகழ்கிறது என்பது தான் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறையில் தார் கொள்முதல் செய்வதில் மட்டும் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான முதன்மை மூலப் பொருள் தார் ஆகும். ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க 100 டன் தார் தேவைப்படும் என்பதை அளவீடாகக் கொண்டு, சாலை அமைப்பதற்கான ஒப்பந்த மதிப்பீட்டை அரசு தயார் செய்யும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னர் தார் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதற்கேற்றவாறு ஒப்பந்த தொகை மாற்றப்படும். இது தான் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கடைபிடித்து வரும் கொள்கை ஆகும்.

இந்திய சந்தையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தாரின் விலை டன்னுக்கு ரூ.41,360 என்ற உச்சத்தை அடைந்தது. இதை அடிப்படையாக வைத்து அந்த ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களுக்கான தொகை தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஒரு டன் தாரின் விலை 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.30,260 ஆகவும், 2016-ஆம் ஆண்டில் ரூ.23,146 ஆகவும் குறைந்தது. விதிகளின்படி 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களுக்கான தொகை அப்போது நிலவிய தாரின் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக 2014-ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத்தொகை தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, 2014-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையும் குறைக்கப்பட்ட தாரின் விலையை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகள் எதையுமே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2016-ஆம் ஆண்டில் ஆண்டில் தாரின் விலை பாதியாகக் குறைந்துவிட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத் தொகை கருதப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு மட்டும் ரூ.1000 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தப் பணிகள் எதுவும் வெளியாருக்கு வழங்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தான் பினாமிகள் பெயரில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடுத்து செயல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே வெளிச்சந்தையில் தார் விலை குறைந்தாலும் கூட, ஒப்பந்ததாரர்களுக்கு பழைய விலையே கணக்கிடப்பட்டு அதிக தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் தார் கொள்முதலில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஏற்கனவே தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக சார்பில் தொடர்ந்த வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சி என்பதால் தன்னை தர்கார்த்து வந்து கொண்டிருந்தார் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், இதனை தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்ற பின்பு இது குறித்து முக்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் முக ஸ்டாலின் கைவசம் உள்ள அதிமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியலில் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ள ஊழல் குற்றசாட்டு விரைவில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது, மேலும் அதிமுக மீது பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளை முன் வைத்து பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்துள்ள திமுக, தற்போது அவர்கள் கூறிய குற்றசாட்டுகளை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காண்பிக்கும் கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளதால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டையை சுழற்ற தயராகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!