அயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல்.! டான்சானியா நாட்டைச் சேர்ந்த இருவர் கைது…

0
Follow on Google News

போதைப் பொருள்களின் பறிமுதலில் மிகப்பெரிய அளவில் 15.6 கிலோ ஹெராயின் டான்சானியா நாட்டைச் சேர்ந்த இருவரிடம் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைப்பற்றப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்திடம் இருந்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தோஹா வழியாக ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கத்தார் ஏர்வேஸ் 528 என்ற விமானத்தில் பயணம் வந்த இருவர், போதை பொருள்களைக் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பதற்றமாக இருந்ததுடன், மழுப்பலாக பதிலளித்தனர். அவர்கள் இருவரும் தலா இரண்டு இழுபெட்டிகளைத் தங்களுடன் விமானத்தில் எடுத்து வந்திருந்தனர்.

அவற்றை சோதனையிட்டதில், இழுபெட்டிகளில் போலியான கீழ்ப்பகுதி இருப்பதும், அவற்றில் நெகிழிப் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு இழுபெட்டியிலும் ஐந்து பொட்டலங்கள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்க்கையில் வெள்ளை நிறத் தூள் இருப்பது தெரியவந்தது. அதன் வாசனையைத் தவிர்ப்பதற்காக காரத்தூள் அதில் தூவப்பட்டிருந்தது.

போதை மருந்து சோதனையில் அந்தத் தூள் ஹெராயின் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 100 கோடி மதிப்பில் 15.6 கிலோ ஹெராயின் என்று சந்தேகிக்கப்படும் தூள் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985 மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைக்காக தமது உதவியாளர் ஃபெலிக்சுடன் பெங்களூரு அதிநவீன மருத்துவமனையிலிருந்து வழங்கப்பட்ட விசாவின் அடிப்படையில் அங்கு சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக பெண் பயணி தெரிவித்தார்.

பெங்களூருவிற்கு நேரடி விமானம் கிடைக்காததால் அவர்கள் சென்னை வந்திறங்கினார்கள்.‌ போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் ரூ.100 கோடி மதிப்பில் 15.6 கிலோ ஹெராயின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதுடன் டான்சானியா நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.