ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன் 1948ம் ஆண்டு பிறந்தார். 1971ம் ஆண்டு வரை திமுகவில் பயணித்து வந்த செங்கோட்டையன், திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டு, தனி கட்சி தொடங்கியதும் 1972ம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைந்து கொண்டார்,
1975ம் ஆண்டு எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளராக இருந்த செங்கோட்டையன், அப்போது, ஆளுங்கட்சியாக திமுக இருந்த நிலையில், அடக்குமுறைகளைத் தாண்டி, கோவையில் அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டிய பொறுப்பு செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த பொதுக்குழுவை மிக சிறப்பாக நடத்தி எம்ஜிஆர் நற்பெயரை பெற்றவர், எம்ஜிஆரின் நம்பிக்கை கூறியவராகவும் திகழ்ந்தார் செங்கோட்டையன். 1977 ல் எம்ஜிஆர் வெற்றி பெற்று முதல் முதலாக ஆட்சி அமைத்த அந்த தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார் முதல் முதலாக சட்டசபைக்குள் உள்ளே சென்றார் செங்கோட்டையன்.

1980-ம் ஆண்டு அதிமுகவின் வேட்பாளராக கோபிசெட்டி பாளையம் தொகுதியில் களமிறங்கிய செங்கோட்டையன் பெற்ற வெற்றி, இன்று வரை கோபி தொகுதியை அவரது சொத்தாக மாற்றி வைத்திருக்கிறது. இடையில் 1996ம் ஆண்டு மட்டுமே அவர் தோல்வியை தழுவி இருக்கிறார். தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சாதனையாளராக திகழ்ந்து வருகிறார் செங்கோட்டையன்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் கட்சி இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று செயல்பட்ட செங்கோட்டையன். 1989ல் ஜெயலலலிதா ஆதரவாளராக சேவல் சின்னத்திலும் வென்று காட்டியவர். 1991-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையவும் செங்கோட்டையனின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்பட்டது.
1991-1996 போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 2011-2016 காலகட்டத்தில் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் போன்ற முக்கிய அமைச்சகங்களைச் சேர்ந்தும் செயல்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான கட்சியின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் அவருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதோடு, அவரது துல்லியமான திட்டமிடல் திறமைக்கும் பெருமை கிடைத்தது.
1996-ல் அதிமுக தோல்வியைத் தழுவியபோது, வழக்குகளுக்கு பயந்து கட்சியை விட்டு பலரும் ஓடிய போதும், ஜெயலலிதாவை விட்டு ஓடாதவர். ‘நானே நேரடியாக அழைத்தாலும், திமுகவுக்கு வரமாட்டார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி, செங்கோட்டையன் குறித்து கூறியதாக ஒரு தகவலும் உண்டு.
எம்ஜிஆர் உடன் பிரச்சாரத்திற்கு செல்வது, ஜெயலலிதா பயண திட்டங்களை வகுப்பது என்று முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன், கருணாநிதி, துரைமுருகன் வரிசையில், அதிக முறை சட்டமன்ற உறுப்பினரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக தலைமை ஜெயலலிதாவிடம் இருந்தவரை, எந்த தேர்தல் என்றாலும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில், செங்கோட்டையன் இன்றி ஓர் அணுவும் அசையாது. முதல் நாள் தேர்தல் பிரசாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்து விட்டு, அடுத்த நாள், எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது உள்பட அனைத்தையும் நள்ளிரவுவரை சுற்றிப் பார்த்து, ஓர் ஒத்திகை நடத்தி திருப்தியான பின்பே உறங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனால் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஜெயலலிதா ஒப்படைத்து வந்தார்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையை கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாய் காத்திருந்தார் செங்கோட்டையன். தலைமை ஏற்கும் வாய்ப்பு தனக்கு வந்த நிலையில், பெருந்தன்மையுடன் அதை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தவர் செங்கோட்டையன் என்று அப்போது நடந்த சம்பவத்துக்கு ஆதார குரலை டிடிவி தினகரன் இப்போதும் வெளிப்படுத்தி வருகிறார்.

