திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படும் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர்.! பொது மக்கள் குற்றசாட்டு..

0
Follow on Google News

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது, இது குறித்து தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதத்தில் துண்டு பிரசுரம் அந்த தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெயரிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கருணாநிதி புகைப்படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக ஈரோடு மாவட்டம் ஐடி பிரிவு மாவட்ட தலைவர் நந்தகுமார், ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவருக்கு எழுதிய கடிதத்தில், தங்களின் பெயர் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் ஆனது சமூக வலைதளங்களில் கடந்த வாரங்களில் உலாவிக் கொண்டு வருகின்றது. இந்த துண்டு பிரசுரங்களில் இந்திய பாரத தேசம் முழுமைக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் சின்னமோ அல்லது பாரத பிரதமரின் படமோ இடம்பெறவில்லை என்பது வருத்தமே.

இருப்பினும் தாங்கள் பெயர் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் அரசியல் உள்நோக்கம் கொண்டு முன்னாள் முதல்வரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் பவானி வட்டாட்சியர் அவர்களும் ஒருதலைபட்சமாக அரசியல் கட்சிக்கு ஆதரவாக உள்நோக்கத்துடன் செயல்படுவதாக பொதுமக்களிடையே கடும் அதிருப்தியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படும் மாவட்ட ஆட்சித் தலைவரும் வட்டாட்சியர் அவர்களும் தங்கள் அரசுப்பணி சார்ந்தவர்கள் என்பதை மறந்து ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பொதுமக்களிடம் அரசுத்துறை சார்ந்த நடுநிலை நம்பிக்கையை ஏற்படுத்தவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த தாசில்தாரிடம் பேசியதாகவும், அவர்கள் இது போன்ற தவறு இனி நடக்காது என உறுதியளித்ததாக நந்தகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பெயரில் உலா வரும் இந்த துண்டு பிரசுரத்தை பார்ப்பவர்கள், கருணாநிதி புகைப்படம் துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது, மேலும் பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறாமல் இருப்பது மாவட்ட ஆட்சியர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போன்று செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.