தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தாராபுரம் தொகுதியில் களநிலைமை தங்களுக்கு சவாலாக இருக்கிறது என்ற தகவல், தமிழக வெற்றிக் கழகத்தின் மேல்மட்டத்திற்கு சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை கணக்குப் போட்டு களத்தில் இறங்கி இருக்கிறது.
ஆனால் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு தற்போது ஒரு புதிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது, தொடர்ந்து பட்டியல் சமூகத்திற்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் 7 அமைச்சர்கள் தவெக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறார்கள், இதை தவெக வினரே பல மேடைகளில் பேசி வருகிறார்கள், மேலும் தொடர்ந்து பட்டியல் சமூகத்திற்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மையமாக வைத்து தமிழக வெற்றிக் கழக ஆட்சி செயல்படுகிறது என்ற ஒரு கருத்தை எதிர்க்கட்சிகள் தாராபுரம் இடைதேர்தலில் மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்து வருவதால தவெக தலைமைக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடம்,
இந்த பிரசாரம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கும் சவால், இதனால், தாராபுரம் தொகுதியில் களப்பணியில் இருக்கும் தவெக வினர் சிலரும் தாராபுரம் தொகுதி சற்று கடினமாக தான் இருக்கிறது என தகவலை தலைமைக்கு கொண்டு சேர்ந்ததாகவும், ஆனால் சூழலை முதல்வர் விஜய் நேரடியாக தாராபுரம் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது, நிலை மாறும் என தலைமைக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.
இதனால் தாராபுரம் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை களமிறக்குவதற்கான நடவடிக்கைகளும் தவெக தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், அ.தி.மு.க.வும் இந்த தேர்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. தாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த தொகுதிகளை ஆளுங்கட்சியிடம் இழந்துவிடக் கூடாது என்பதிலும்,
குறிப்பாக தங்களிடமிருந்து விலகிச் சென்ற முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தில் தங்களுடைய அரசியல் செல்வாக்கு இன்னும் வலுவாகவே இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சிக்கு எதிரான குறைகளை முன்வைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாலும் கூட, குறிப்பாக அங்கே குறிப்பிட்ட பெரும்பான்மை சமூக வாக்குகள் எந்த பக்கம் செல்லும் என்பதையும், எந்த சமூகத்தின் வாக்குகள் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்யும் என்பதே தேர்தல் களநிலவரமாக உள்ளது என்கிறது தாராபுரத்தில் இருந்து வரும் தகவல்.
இருந்தாலும் தாராபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களித்து எடப்பாடி முதல்வராக போவது இல்லை, அதே போன்று திமுகவுக்கு வாக்களித்து அவர்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை, ஆளும் தவெக அரசுக்கே வாக்களித்து விடுவோமா என்கிற மனநிலைக்கு வந்து விசிலுக்கு வாக்குகளை அள்ளி கொடுப்பார்களா.? தாராபுரம் தொகுதி மக்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

