கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்காக பென்னிகுவிக் வாழ்ந்த வீட்டை இடிப்பதா.? தலைவர்கள் எதிர்ப்பு..

0
Follow on Google News

பென்னிகுவிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு எதிர்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென் தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனைக் கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும், அவர்களது பெருமைகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களை பேணிப் பாதுகாப்பதும் ஒரு நல்லரசின் கடமையாகும். அந்த வகையில், பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி, தென் தமிழகத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லம் தமிழ்நாடு அரசால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், நூற்றாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் “மதுரையில் முன்னாள் முதல்வரின் பெயரிலான நூலகம் அமைக்கத் தேர்வான பொதுப்பணித் துறைக் கட்டிடத்தில் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தென் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக், மதுரை மாநகரில் நத்தம் செல்லும் சாலையில் வாழ்ந்ததாகவும், அதற்கு ஆதாரமாக தன்னுடைய உடைகளைச் சுவற்றில் தொங்கவிடுவதற்கு ஸ்டாண்டும், ‘பெரியாறு இல்லம்’ என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் இருந்ததாகவும், இது உண்மை என்பதால்தான், மதுரை மாநகரப் பொதுப்பணித் துறை வளாகத்தில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 15.06.2000 அன்று கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் முழு உருவச் சிலை, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதாகவும், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவு இல்லம் இன்றளவிலும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை அழித்துவிட்டால், அப்பகுதி மக்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும். கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்ற முடிவு, சரித்திரத்தைச் சிதைப்பதற்கு சமம். தென் தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமேயானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அஇஅதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது டிவீட்டர் பதிவில், மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது.

அதற்காக பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிப்பது முறையல்ல. பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் வசிப்பிடமாக உள்ள அந்த இல்லத்தை பென்னிகுவிக் நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்! மதுரை பாண்டி கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதை விட இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.