பாஜகவின் அதிகாரமிக்க பதவியாக ‘அமைப்புப் பொதுச்செயலாளர்’ பதவி இருந்து வருகிறது, முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரால் இந்த பொறுப்புக்கு ஆட்கள் நியமிக்கப்படுவது வழக்கம். தற்பொழுது தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து, தமிழக பாஜகவின் அதிகாரமிக்க பதவியான ‘அமைப்புப் பொதுச்செயலாளர்’ பொறுப்பிற்கு பிரசோப் குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழக பாஜகவில் அமைப்பு ரீதியான இந்த மாற்றம் பாஜகவினர் பெரும்பாலும் எதிர்பார்க்காத மாற்றமாக அமைத்துள்ளது . சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில், பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பாஜகவின் ‘அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்த கேசவ விநாயகம், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தனது ஆர்.எஸ்.எஸ் பணிக்கே திரும்புகிறார். இதையடுத்து அடுத்த தமிழக அமைப்புப் பொதுச்செயலாளர்’ பொறுப்பிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசோப் குமார் நியமிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பாஜகவின் அமைப்புப் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் வழக்கமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து ‘பிரசாரக்’களாக வந்து கட்சியில் இணைபவர்கள். அந்த வகையில், பிரசோப் குமார் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழுநேரப் பணியாளராக அதாவது பிரச்சாரக் ஆக இருந்து, பின் கட்சிப் பணிகளுக்கு வந்தவர்.
பிரசோப் குமார் இதற்கு முன்பு தமிழக பாஜகவின் ‘மாநிலச் செயலாளர்’ போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் கிளை அமைப்புகளை பலப்படுத்துவதில் இவருக்கு அதிக அனுபவம் கொண்ட பிரசோப் குமார் சரியான தேர்வாக இருக்கும் என ஆர் எஸ் எஸ் முடிவு செய்து அமைப்பு பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்க இருக்கிறது என்கிறது பாஜக வட்டாரங்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் கட்சிக்கு ஒரு துடிப்பான மற்றும் வேகமான செயல்பாட்டாளர் தேவைப்பட்டார். பிரசோப் குமார் அத்தகைய ஒருவராக டெல்லி மேலிடத்தால் பார்க்கப்படுகிறார். மேலும் தொடர்ந்து இதற்கு முன்பு அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் தான் நீண்ட நாட்கள் இந்த பொறுப்பில் இருந்து விட்டேன் என்னை விடுவித்து விடுங்கள் என தொடர்ந்து ஆர் எஸ் எஸ் தலைமையிடம் கேட்டு வந்ததை தொடர்ந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்ட்டுள்ளார்.
கட்சியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் திறன் கொண்டவராக பிரசோப் குமார் என முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தலைமை, குறிப்பாக தென் மாவட்டங்களில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தவும், அங்குள்ள அமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ளவும் கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த பிரசோப் குமார் சரியான தேர்வாக ஆர் எஸ் எஸ் கருதுகிறது.
பிரசோப் குமாரின் வருகை தமிழக பாஜகவின் தேர்தல் வியூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் பின்னணி மற்றும் களப்பணி அனுபவம் கொண்ட இவர், தமிழக அரசியலில் பாஜகவின் அடுத்தகட்ட நகர்வை வெற்றி கரமாக எடுத்து செல்வார் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

