மதுரை ஆதீனத்துக்குள்ள இனி நித்யானாந்தா நுழைஞ்சா அரெஸ்ட்தான்: மதுரை ஆதீனம் கரார்.

0
Follow on Google News

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் இறந்ததை தொடர்ந்து, நித்யானந்தா அடுத்த ஆதீனமாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.

இந்த சூழலில் ஆக.23ந் தேதி மதுரை ஆதீனமாக ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார். இந்நிலையில், மதுரையில் வ.உ.சி., சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம், நித்யானந்தா குறித்து கூறும்போது, ”அவன் எல்லாம் ஆதீனத்துக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த மடத்திற்குள் அவன் நுழைந்தால் கைது செய்யப்படுவான்,” என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, மதுரை ஆதீன மடத்தின் சார்பாக, 5 விருதுகள் வழங்கப்பட உள்ளது. சிறந்த ஓதுவாருக்கு ஞானசம்பந்தர் விருது, சைவ சமயத்தில் சிறப்பாக செயல்படும் பெண்மணிக்கு மங்கையர்க்கரசி விருது. மடத்திற்கு வெள்ளி தேர் செய்து கொடுத்த பாண்டித்துரை தேவர் பெயரில் ஒரு விருது, தியாகத்திற்காக வ.உ.சி., விருது, மதுரை ஆதீனத்திடம் தீட்சை வாங்கிய வள்ளலார் பெயரில் ஒரு விருது வழங்க உள்ளோம்.

அதுமட்டுமில்லாமல், மடத்திற்கு எந்நேரம் வந்தாலும் அன்னதானம் உண்டு. யார் வேண்டுமானாலும் மடத்திற்கு வரலாம். கதவுகள் திறந்தே இருக்கும். எல்லா அரசியல் கட்சி தலைவர்களுடனும் நட்பு பாராட்டுவேன். மதநல்லிணக்கம் உடைய ஆதீனமாக இருக்க நான் தயார். சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.