என்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு தற்போது என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிறிஸில்டா போலீஸ் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணையும் மாதம்பட்டி ரங்கராஜிடம் நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பின்பு இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட தனது அறிக்கையில், தன்னிச்சையாக நான் ஜாய் கிறிஸில்டாவை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த திருமணம் மிரட்டல் மற்றும் கட்டாயத்தின் பெயரில் நடந்தது. இதன் நோக்கம் பணம் பறிப்பதுதான் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். மேலும் டிஎன்ஏ பரிசோதனையை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. அந்த குழந்தை என்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவனை கவனித்துக் கொள்வேன் என்றும் கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய ஒரு ரொமான்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஏய் பொண்டாட்டி… நீ எவ்ளோ அழகுன்னு தெரியுமா என்று ரங்கராஜ் பேசி இருந்தார். இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும் என்று சொல்வார்களா? என்று ஜாய் கிறிஸில்டா அதில் கேப்சன் எழுதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மோதல்களுக்கு மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு தனது கணவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார். ஸ்ருதி பிரியா அந்த பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் மாதம் நான் என் குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட போது ஏப்ரல் மாதத்தில் ஜாய் கிறிஸில்டாவிடம் இருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளை பெற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் ரீதியாக பிரிந்ததாக பொய்யாக ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தை வெளிக்காட்டுகிறது. அவர் ஊடகங்களை தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்துக்காக தவறாக பயன்படுத்தி எங்கள் குடும்ப அமைதியை குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஜாய் கிறிஸில்டா தனது கைபட சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில் எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம பறிப்பது மற்றும் எங்கள் குடும்பத்தை பிரிப்பதுதான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறி இருப்பது பதிவாக உள்ளது என்றும் ஸ்ருதி அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
மேலும் ஜாய் கிறிஸில்டா எழுதிய கடிதத்தில் உள்ள சில பகுதிகளை ஸ்ருதி, மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில், தனது பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும். ரங்கராஜ் என்னை மனைவியாக சமூகத்தின் முன் அறிமுகப்படுத்த வேண்டும். ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும். ரங்கராஜ் எனக்கு மாதந்தோறும் 8 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். இப்போது எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார்.
கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இந்த வரிகளின் மூலம் ஜாய் கிறிஸில்டாவின் உண்மையான நோக்கம் எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் சட்டபூர்வமான மனைவியான என்னுடைய குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது என்பதை தெளிவாக காட்டுகிறது. நான், என்னுடைய கணவர் ரங்கராஜூடன் உறுதியாக நிற்கிறேன். அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்று அந்த அறிக்கையில் ஸ்ருதி கூறியிருக்கிறார். தற்போது இந்த பிரச்சனை கணவர், முதல் மனைவி மற்றும் 2வது மனைவி என்ற முக்கோண போராட்டமாக உருவெடுத்துள்ளது. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என்ற பாடல் வரிகளையும் பலருக்கும் நினைவுபடுத்துகிறது

