குறிவைக்கப்படும் சுபிக்சா… மீனவப் பெண் என்றால் இளக்காரமா… பிக் பாஸ் வீட்டில் தரக்குறைவாக நடத்தப்படும் அவலம்…

0
Follow on Google News

மது அருந்துவது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை போல பிக்பாஸ் பார்ப்பது மனநலனுக்கு கேடுவிளைவிக்கும் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தளவுக்கு ஒரு வீட்டுக்குள் 20 பேர் புகுந்துக்கொண்டு டாஸ்க் என்ற பெயரில் புதிது புதிதாக பிரச்னைகளை உண்டாக்குவதும் ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதும் அவர்களுக்குள் ஏற்படும் மோதலும் போட்டியும் பொறாமையும் என பொழுதுபோக்கு அம்சம் தாண்டி மனம் சார்ந்த அழுத்தங்களை உளவியல் ரீதியான பாதிப்புகளை உண்டாகும் ஒரு ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி மீது கடும் விமர்சனம் இருந்து வருகிறது.

எப்போதும் யாரையும் நேரடியாக காயப்படுத்தும் விதமாகவோ நோஸ்கட் செய்யும் விதமாகவோ கமல்ஹாசன் பேசியது இல்லை. ஆனால் விஜய் சேதுபதி இதற்கு நேர்மாறாக இருக்கிறார். நேரடியாக நெற்றிப் பொட்டில் அடித்தது போல உண்மைகளை போட்டு உடைக்கிறார். போட்டியாளர்களை நேரடியாக விமர்சிக்கிறார். நோஸ் கட் செய்கிறார்.

இதுவரை குறைந்த வாக்குகள் என்ற அடிப்படையில் பிரவீன் காந்தி, அப்சரா என்ற 2 போட்டியாளர்கள் நாமினேஷனில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதுதவிர நந்தினி என்ற போட்டியாளர் அவராகவே வெளியேறி விட்டார். இப்போது வீட்டுக்குள் இருக்கும் பெண் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் சுபிக்சா. மீனவப் பெண்ணான இவர் சொந்தமாக மீன் ஊறுகாய் விற்கும் தொழிலும் செய்து வருகிறார். தமிழில் முதன்முறையாக கடலுக்கு சென்று வ்லாக் செய்யும் யூடியூபர் என்ற பெயரையும் சுபிக்சா பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சுபிக்சா குறித்து சக போட்டியாளர் கம்ருதீன் தரக்குறைவாக பேசியிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சுபிக்சாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் கம்ருதீன், நீ இப்படியெல்லாம் பேசாதே. எப்படி நீ வளர்க்கப்பட்டு இருக்கிறாய்? நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை அது காட்டுகிறது என்று நேரடியாக விமர்சித்து பேசுகிறார். அதற்கு பதில் பேசிய சுபிக்சா, எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றால் என்ன? தேவையில்லாமல் பேசாதீங்க என்கிறார்.

உடனே கம்ருதீன் கடுப்பாகி, நீ கையை இறக்கிப் பேசு. நான் இங்கு கஷ்டப்பட்டு உழைத்து வந்திருக்கிறேன் என்கிறார். இந்த சூடான உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவரது பிறப்பு வளர்ப்பு எங்கிருந்து வருகிறார் என்பது குறித்து ஒரு போட்டியாளர்கள் சக பெண் போட்டியாளரிடம் வரம்பு மீறி அவரை பற்றி விமர்சிப்பது மிகவும் தரக்குறைவாக ஒரு இழிவான செயலாக உள்ளதாக பலரும் எதிர்ப்பும் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக நுழைந்ததவர் வாட்டர் மெலன் ஸ்டார், நடிப்பு அரக்கன் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் திவாகர். இவர் ஏற்கனவே மக்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்தவர். நெல்லையில் கவின் கொலை வழக்கு குறித்து ஒரு பேட்டியில் பேசிய திவாகர், கொலை செய்த சர்ஜித்தை தனது சாதி என்று கூறி காதலிப்பவர்கள் தங்கள் பெற்றோருக்கு பங்கம் விளைவிக்காதவாறு காதலிக்க வேண்டும் என்றார். இது பெரும்புயலை கிளப்பியது. இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் பலரும் திவாகரை சாதியவாதி என்று கூறினர்.

இந்நிலையில் கம்ருதீன் – சுபிக்சா உரையாடலும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இப்படி ஒரு பெண் எங்கிருந்து வந்தார் எப்படி வந்தார் என்றெல்லாம் மீனவ பெண் என்பதற்காக சுபிக்சா குறித்து பேசுவதும் அவரது வளர்ப்பு குறித்து விமர்சனம் செய்வதும் சாதியம் பேசும் ஒரு தவறான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.