மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தேனி : எத்தனை கொலைகள் தான் தமிழகத்தில் நடக்குமோ இதற்கு ஒரு முடிவே இல்லையா என மக்கள் பீதியில் புலம்பிவரும் வேளையில் அரசு அலுவலகத்தில் புகுந்தே ஒரு பெண் அதிகாரி மீது கொலை முயற்சி நடந்தது தேனி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கமிஷனர் ஆபிஸ், ஆர்.டி.ஓ ஆபிஸ் எம்பிளாய்மென்ட் ஆபிஸ் என பல அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதில் ஒரு அலுவலகம்தான் மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் அலுவலகம். இதில் திட்டப்பணியாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி.

இந்த அலுவலகத்தில் 2015-16 காலகட்டத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் உமாசங்கர் எனும் பெண் அதிகாரி. இவர் நேற்று ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் அலுவலகத்தில் நுழைந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஸ்வரியை திடீரென வெட்டியுள்ளார். இதில் ராஜேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் அரண்டுபோன ராஜேஸ்வரி உடலில் பட்ட காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட கண்காணிப்பாளர் முத்துமணி என்பவரின் அறைக்கு ஓடியுள்ளார். ரத்தவெள்ளத்தில் வந்த ராஜேஸ்வரியை கண்ட முத்துமணி அலறியுள்ளார். ராஜேஸ்வரி மற்றும் முத்துமணியின் அலறலை கேட்ட மற்ற அரசு ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

அங்கு தலைவிரிகோலமாய் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் நின்ற உமாசங்கரை கண்ட ஊழியர்கள் பதைபதைத்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து உமாசங்கரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கினர். ராஜேஸ்வரியை படுகாயங்களுடன் மீட்டு அரசுமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த கலெக்டர் முரளிதரன் மற்றும் காவல கண்காணிப்பாளர் உமேஷ் சம்பவ இடத்திற்கு சென்றபின்னரே ராஜேஸ்வரி ஆம்புலன்சில் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உமாசங்கரை கைதுசெய்த் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜேஸ்வரி, உமாசங்கர் மீது பொய்யான குற்றசாட்டுகளை அடுக்கி அடிக்கடி பணியிடமாற்றம் செய்துள்ளார். இடைநீக்கமும் செய்துள்ளார்.

தற்போது அவரை திருப்பூர் வெள்ளகோவிலுக்கு இடம்மாற்றியதோடு தேனிக்கு ட்ரான்ஸ்பர் முயற்சிக்கையில் அதற்கும் முட்டுக்கட்டையாக இருந்துள்ளார் ராஜேஸ்வரி. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜேஸ்வரியை கொல்ல முயன்றதாக உமாசங்கர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.