ஒரு அரசாங்கம் ஒரு உத்தரவு போடுவது பெரிய விஷயம் கிடையாது… ஒரு அரசாணையை வெளியிடுவது இன்னும் எளிதான விஷயம்தான். ஆனால் அந்த அரசாணையை கோப்புகளுக்குள் தூங்க விடாமல், அதை நடைமுறைக்கு கொண்டு வந்து, அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரையும் கடைபிடிக்க வைப்பதுதான் உண்மையான சவால். அந்த வகையில் இப்போது தவெக அரசு எடுத்திருக்கும் ஒரு நடவடிக்கைதான் அரசு ஊழியர்களின் சொத்து கணக்கு விவகாரம்.
அரசு ஊழியர்கள் தங்களிடம் இருக்கும் சொத்துகள், பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்களை முறையாக கணக்கு காட்ட வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே இருந்த ஒன்று. ஆனால் பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட உத்தரவுகள் இருந்தும், அது எந்த அளவுக்கு முழுமையாக நடைமுறையில் இருந்தது என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

அரசாணை ஒன்று பிறப்பிக்கப்படும்… அதிகாரிகளிடம் கோப்புகள் செல்லும்… அதன்பிறகு அந்த விஷயம் அப்படியே அமைதியாகிவிடும். ஆனால் இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது.“சொத்து கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் பதவி உயர்வு கிடையாது” என்ற அளவுக்கு இந்த நடைமுறை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதாவது, இனிமேல் சொத்து விவரத்தை தாக்கல் செய்வது ஒரு சாதாரண சம்பிரதாயம் கிடையாது. அரசு ஊழியர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை முறையாக பதிவு செய்வது நிர்வாகத்தில் முக்கியமான கட்டாய நடைமுறையாக மாறுகிறது. இதுதான் இந்த நடவடிக்கையில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்.
இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… அரசு ஊழியர்களை பகைத்துக் கொள்வது என்பது எந்த அரசாங்கத்திற்கும் சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் அரசு நிர்வாகம் இயங்குவதற்கு அரசு ஊழியர்கள்தான் முக்கியமான முதுகெலும்பு. அவர்களிடம் ஒரு கடுமையான நடைமுறையை கொண்டு வந்து, “கணக்கு காட்டவில்லை என்றால் பதவி உயர்வு இல்லை” என்று சொல்வதற்கு நிர்வாக ரீதியாக ஒரு துணிச்சல் தேவைப்படுகிறது.
அந்த முடிவைத்தான் இப்போது விஜய் தலைமையிலான ஆட்சி எடுத்திருக்கிறது என்று இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் பாராட்டுகிறார்கள். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஊழலைப் பற்றி பேசுவது மிகவும் எளிது. ஊழலை ஒழிப்போம் என்று மேடையில் பேசுவதும் எளிது. ஆனால் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக, அரசு ஊழியர்களிடம் அவர்களுடைய சொத்து விவரங்களை முறையாக கேட்டு, அதை நிர்வாக நடைமுறையுடன் இணைப்பது என்பது வேறு விஷயம்.
அதிலும் குறிப்பாக, “கணக்கு காட்டவில்லை என்றால் பதவி உயர்வு இல்லை” என்று சொல்வது சாதாரண அறிவிப்பு கிடையாது. பதவி உயர்வு என்பது அரசு ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அந்த பதவி உயர்வுடன் சொத்து கணக்கு தாக்கலை இணைப்பதன் மூலம், “இந்த நடைமுறையை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்” என்ற தெளிவான செய்தி அரசு ஊழியர்களுக்கு செல்கிறது.
ஆட்சிக்கு வருவது மட்டும் சாதனை கிடையாது. ஆட்சிக்கு வந்த பிறகு, நிர்வாகத்தில் ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருவதற்காக எடுக்கப்படும் முடிவுகள்தான் அந்த ஆட்சியின் செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. அரசு ஊழியர்களின் சொத்து கணக்கை கட்டாயமாக்கி, அதை பதவி உயர்வுடன் இணைக்கும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எந்த அளவுக்கு நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறது என்பதுதான் இனி பார்க்க வேண்டிய விஷயம்.
ஆனால் இந்த முடிவை துணிச்சலான நிர்வாக நடவடிக்கை என்று பாராட்டுபவர்கள் ஒரு வார்த்தையை மட்டும் சொல்கிறார்கள்… “இப்படியொரு முடிவை எடுத்த முதல்வர் விஜய்க்கு ஒரு ராயல் சல்யூட்!”

