ஜெம் வீரமணி தப்பிக்க கைமாறிய பணம்… ஆதரவற்ற பெண்கள் தான் டார்கெட்… போயஸ் கார்டனில் நடந்த திகில்…

0
Follow on Google News

ஜெம் வீரமணி வழக்கில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை ஆரம்பத்தில் அடையாளம் காண முடியவில்லை. இதனால் வழக்கை முடிப்பதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த முடிவு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஏற்கப்படவில்லை. வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறப்பு குழு அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போதுதான், அந்த வீடியோவில் இருந்ததாகக் கூறப்படும் பெண் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, அவருடைய வாக்குமூலமும் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான வீரமணி, அவருக்கு உதவியதாகக் கூறப்படும் சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

தற்போது போலீஸ் காவலில் உள்ள வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்த விசாரணையில்தான் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சென்னையின் போயஸ் கார்டன் பகுதியில் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வாடகைக்கு ஒரு பங்களா எடுக்கப்பட்டதாகவும்,

அங்கு மதுபானம் வழங்கப்பட்டு, பெண்கள் உடல் ரீதியாக ரீதியான துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை அழைத்து வருவதில் வீரமணியின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதாக கூறப்படும் சாந்தியும், அவரது கணவர் மகேந்திரசிம்மனும் முக்கிய பங்கு வகித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி அறக்கட்டளைகள் மற்றும் ஆசிரமங்கள் நடத்தப்பட்டதாகவும், அதன் மூலம் பெற்றோரால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் இதில் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆதரவற்ற பெண்களுக்கு ஆடைகள், பணம், செல்போன்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறி சிலரை போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சென்ற பிறகு, அவர்களில் சிலருக்கு மதுபானம் கொடுத்து, பாலியல் தொடர்பில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவங்கள் ஒன்றிரண்டு நாட்களில் நடந்தவை அல்ல என்றும், பல ஆண்டுகளாக இதுபோன்ற செயல்பாடுகள் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, வீரமணியின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளுக்காகவும் அந்த பங்களாவுக்கு சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டதாக கூறப்படும் தகவல்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்னும் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் இந்த வலையமைப்பில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வீரமணியை கைது செய்யாமல் இருக்க பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த பணம் யாரிடமிருந்து யாருக்கு சென்றது என்பதை விசாரிக்க கூடுதல் ஆணையர் தலைமையில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.