இளையராஜாவை அவமதித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கிய ஜேம்ஸ் வசந்த்.! இசை ரசிகர்கள் கடும் கொந்தளிப்பு..

0
Follow on Google News

இந்தியத் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 2020-ம் ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். அவர் காலமாகி ஒரு வருடம் முடிந்த நிலையில், கடந்த செப்டம்பர் 25 திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் எஸ்.பி.பி முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இளையராஜா கலந்து கொண்டார். தனது பேச்சில் எஸ்.பி.பி உடனான நட்பு குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார் அதில்,

பாலுவுக்கும் எனக்குமான நட்பு எந்த மாதிரி என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயம். ரொம்ப சர்வசாதாரணமாகப் பழகக்கூடிய நண்பர். அந்தக் காலத்திலேயே மேடையில் ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருந்தேன் என்றால் பக்கத்தில் பாலு பாடுவார். எங்களைச் சுற்றி மற்ற அனைவரும் இருப்பார்கள். இசையமைப்பாளராக ஆன பின்பு கூட எங்களுடைய நட்பு தொடர்ந்தது. இருவருடைய உழைப்பினால்தான் பல பாடல்கள் உங்களை வந்து சேர்ந்துள்ளன.

நீ இப்படிப் பாடு, அப்படிப் பாடு என்பது என்னுடைய கற்பனை. அது வேறு விஷயம். பாடல் பதிவின்போது அந்த நட்பு இடையில் வரவே வராது. தொழில், நட்பு இரண்டுமே வேறு. பல மேடைகளில் என்னைப் பற்றி நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் புகழ்ந்து எனக்கென்றும் ஆகப் போவதில்லை. நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து, அவருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால், எனக்கு அவர் மனதிற்குள் என்ன இடம் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியம். நான் ஆர்மோனியம் வாசிப்பவராக இருந்து, இசையமைப்பாளராக மாறி இருவரும் நிறையப் பாடல்கள் உருவாக்கினோம்.

அவர் எனக்கு மனதில் எந்த மாதிரியான இடம் கொடுத்தார் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். அவர் மருத்துவமனையில் அபாயக் கட்டத்தில் இருந்தார். பலரும் ட்விட்டரில் அவர் மீண்டு வரவேண்டும் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னிடமும் நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அவன் திரும்பி வந்துவிடுவான் என்று சொன்னேன். பின்பு உடல்நிலை ரொம்ப மோசமானவுடன், நானும் ஒரு வீடியோ பேசி வெளியிட்டேன்.

“பாலு.. உனக்காகக் காத்திருக்கிறேன் சீக்கிரம் வா” என்று அதில் சொல்லியிருப்பேன். அந்த வீடியோவை எஸ்.பி.பிக்கு நினைவு வந்தபோது எஸ்.பி.சரண் போட்டுக் காட்டியிருக்கிறான். உடனே கண் எல்லாம் கலங்கி, போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். யாரையாவது பார்க்க வேண்டுமா என்று எஸ்.பி.பியிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது “ராஜாவை வரச் சொல்லு” என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா? அவருடைய மனதில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்றால், என்னை மட்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும்.

அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பது தான் சத்தியம் என எஸ்பிபி உடன் இருந்த தனது நட்பை பற்றி இசைஞானி இளையராஜா பகிர்ந்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்து அடுத்த நாள், இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் வெளியிட்ட ஒரு கருத்து இளையராஜா ரசிகர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜேம்ஸ் வசந்த் தனது முகநூல் பக்கத்தில், ஒருவன் உயிருடன் இருக்கும்போது அவனை நோகடித்து, புண்படுத்திவிட்டு இப்போது அவன் இல்லையென்று ஆனவுடன், அவனைப்போல் ஒருவன் இல்லை என்று பேசுவது என்ன ஒரு மாய்மாலம்! நேற்று SPB நினைவு தினம் என பதிவு செய்திருந்த ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இசைஞானி இளையராஜா ரசிகர் ஒருவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார் அதில்,

ஜேம்ஸ் வசந்தன் அவர்களே, நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து படிப்படியாக கிடைத்த வாய்ப்பு. சுப்பிரமணியபுரம் படத்திற்கான பாடல்களை கேட்கும் போது, என் ராகதேவன் இளையராஜாவின் சாயல் இருந்ததை எவராலும் மறுக்க இயலாது. ‘கண்கள் இரண்டால்’ பாடலின் ராகம் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலைப் போன்ற மெட்டு என்று பாமரனும் கூறி விடுவான். ‘மதுரை குலுங்க குலுங்க’ -பாடலின் கிராமியத் தனமான இசையும் இசைஞானியின் சாயல் இருந்ததை உணர முடியும்.

அன்றும் சரி, இன்றும் இந்த பாடல்களின் ரசிகன் நான். ஏனெனில் அவை எங்கள் ராஜாவின் பாடல்களை போல் இருந்ததால் ரசிக்க முடிந்தது. பிறகு உங்களுக்கு என்று தனித்தன்மையாக இருந்து ஹிட்டான பாடல் என்றால் ‘நாணயம்’ படத்தின் ‘நான் போகிறேன் மேலே’- பாடல். அதையும் ரசித்தவன். அவ்வளவு தான் உங்கள் இசையின் சரக்கு.! பிறகு வந்த படங்களின் பாடல்கள் பின்னணி இசை எதுவுமே அப்படி ஒன்றும் நன்றாக இல்லை. அப்படிப்பட்ட நீங்கள் சிறந்த நண்பர்களை, திறமையாளர்களின் நட்பினை (Legends) பற்றிப் பேச தகுதியில்லை.

நண்பர்கள் என்றால் எப்போதுமே ஒற்றுமையாகத் தான் இருப்பார்கள் என்ற அவசியமில்லையே.?! அவர்கள் நண்பர்களாக இருந்த காலங்கள் பல வருடங்கள். ஏதோ..அவர்களிடையே சின்ன மனகசப்பு சிறிது காலம் இருந்தது. யார் கண்பட்டதோ தெரிய வில்லை. வாழ்க்கை என்றால் சில நேரங்களில் சில மனிதர்களின் இடையூறுகளால் நட்புக்குள் சிறிது பிரிவு ஏற்படுவது சகஜமான ஒன்றாகும். அதை தூண்டி விட்டு பெரிது படுத்துவது என்பது சிலரின் பொழுது போக்காக இருந்து வருகிறது.

அவர்களுடைய உண்மையான ரசிகர்களால் அவர்களுடைய அன்பினை உணர முடியும். ஒருவருடைய இழப்பின் வலியை, அவர்கள் இறந்த நாளன்று அஞ்சலி செலுத்தும் போது, அதனை கொச்சைப் படுத்துவது போன்ற செயலாகவே உங்கள் பதிவை எடுத்துக் கொள்ள முடிகிறது. இப்போது பல பேர் தங்களை யாரும் மறக்காமல் இருக்க அவ்வப்போது முக்கிய பிரபலங்களை தாக்கி பேசி, தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதை பார்க்க முடிகிறது. அதில் நீங்களும் ஒருவர் என்றே நினைக்கிறேன்.

நண்பர்களுக்குள் ஆயிரம் மனஸ்தாபங்கள் இருக்கும். பிறகு என்றாவது ஒன்று சேர்வார்கள். எங்கள் இசைஞானியும், பாட்டுத் தலைவனும் அப்படித் தான் இறுதியாக இருந்தார்கள். ‘பழையதை கிளறி புதிய பிரபலமாக ‘ உங்களை காட்டிக் கொள்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் மீண்டும் ‘சுப்பிரமணியபுரம்’ போன்ற பாடல்களை தந்து திறமையை நிரூபியுங்கள். அடுத்தவரை அவமதித்து பெறும் புகழ் நிலைக்காது என தெரிவித்துள்ளார்.