100 கோடி வசூல்… மஞ்சும்மல் பாய்ஸ் சாதனை… வாய் பிளந்து பார்க்கும் தமிழ் சினிமா…

0
Follow on Google News

எப்படி ஒரு காலத்தில் பிரேமம் திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலங்கள் என பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதோ அதே போன்று மீண்டும் ஒரு மலையாள படம் தற்பொழுது பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுதான் மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்திலும் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் பற்றிய பேச்சு தான். அந்த அளவுக்கு தமிழகமெங்கும் சக்கைப்போடு போட்டு வருகிறது இப்படம். ஒரு தமிழ்படம் கூட வெற்றி அடையாதா என்கிற ஏக்கத்தில் இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பட்டைய கிளப்பி வருகிறது. தமிழ்படங்களைக் காட்டிலும் மஞ்சும்மல் பாய்ஸுக்கு தான் அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

2006ம் ஆண்டில் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி உள்ள படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ள இந்த மலையாள படத்தில் 60% தமிழ் பேசுவது மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக ஓடுகிறது. இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட்.

குணா படத்தில் கமல்ஹாசன் பாடிய கண்மணி அன்போடு காதலன் பாடல் அந்த படத்துக்கு எப்படி ஒரு உயிரோட்டமாக அமைந்திருந்ததோ, அதை மிஞ்சும் அளவுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி இதுவரை காதலர்கள் கொண்டாடிய அப்பாடலை தற்போது நண்பர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மஞ்சும்மல் பாய்ஸ் தான். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 7 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை குவித்தது. இதற்கு முக்கிய காரணம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு. நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை.

இந்த படத்தை பார்த்த பின்பு உலக நாயகன் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார். அவர் மட்டுமல்ல உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 7 நாட்களில் மட்டும் 50 கோடியை வசூலித்துள்ளதாக மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னர் வெளியிட்டது.

இந்தப்படம் வெளியான அன்றைய தினம் 3.3 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவாக கருத்துக்களை பகிர, அதனைதொடர்ந்து படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வர ஆரம்பித்தனர். இதனால் முதல் வார இறுதியில் இந்த திரைப்படம் 32கோடி ரூபாய் வசூல் செய்தது. 2ம் வார இறுதிநாளான நேற்றைய தினம் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 11.25 கோடி வசூல் செய்திருக்கிறது.

படம் தற்போது வரை உலக அளவில் ரூ.75 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வேலை நாளான இன்று (திங்கள்கிழமை) இரவுக்காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளன. கடந்த 3 நாட்களாக கேரளாவைக் காட்டிலும், தமிழகத்தில் வசூல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை படம் கேரளத்தில் ரூ.3.43 கோடியை வசூலித்தது. தமிழகத்தில் ரூ.4.25 கோடி வசூலை குவித்தது. விரைவில் படம் ரூ.100 கோடியை வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை இப்படம் ரூ.15 கோடி வசூலித்து உள்ளதாம். தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மலையாள படம் ஒன்றிற்கு இதுவரை இந்த அளவு வரவேற்பு கிடைத்ததில்லை. 15 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற சாதனையையும் மஞ்சும்மல் பாய்ஸ் நிகழ்த்தி இருக்கிறது.