மகள் பவதாரணிக்கு பிடித்த உடையில் உடல் அடக்கம்… கண் கலங்கிய இளையராஜா…

0
Follow on Google News

இளையராஜா மகள் பவதாரிணி, கல்லீரல் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 6 மாத காலமாகவே இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். எதார்த்தமாக இலங்கைக்கு கான்செர்ட் சென்ற இளையராஜாவிற்கு மகளின் இறப்பு பேரிடியாய் வந்தது.பவதாரிணியின் உடல் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பவதாரிணியின் உடலை பார்த்ததும் இயக்குநர் பாரதிராஜா கதறி அழத் தொடங்கினார். பின்பு இவரது உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இறுதி அஞ்சலியின் போது திருவாசகம் வாசிக்கப்பட்டது.அவருக்கு வேதங்கள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது. இதையடுத்து, சகோதர்களாகிய வெங்கட்பிரபு, யுவன், கார்த்திக் ஆகியோர் தோளில் சுமந்த படி சென்ற பவதாரிணி, இறுதியாக தாய், பாட்டி சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே உயிரிழந்த தாயாரையும், மனைவியையும் இளையராஜா அவரது வீட்டிலேயே அடக்கம் செய்த நிலையில், தற்போது மகளையும் அங்கேயே அடக்கம் செய்துள்ளார்.

இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில் உறவினர்கள் பவதாரிணியின் உடலை தூக்கியபோது அவரின் தேசிய விருது பெற்ற பிரபல பாடலான‘மயில் போல பொண்ணு ஒன்னு. கிளிபோல பேச்சு ஒன்னு’‌ என்ற பாடலை பாடியபடி சென்றனர். இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் மணிமண்டபத்துக்கு நடுவில் பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பவதாரணிக்கு கடைசியாக அவருக்கு பிடித்த பச்சை நிற ஆடையை அணிவித்திருந்தனர். அதாவது பச்சை நிற பட்டு சேலையை போர்த்தி அடக்கம் செய்தனர்.‌ விரைவில் இவருக்கும் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறும் என இளையராஜாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இப்போது இளையராஜா உருக்கமான பதிவு ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது மகள் குழந்தையாக இருக்கும் போது எடுத்த படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா, “எனது மகளே” என்று மட்டும் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவுக்கு கீழ் அவரது ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.