ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்.!திமுக வெற்றியை ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது.! முக ஸ்டாலின் சூளுரை

0
Follow on Google News

திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது தொண்டர்களிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், கடந்த 22-ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். ‘என்னது சிவாஜி செத்துட்டாரா?’ என்று கேட்பது போல அவரது பேச்சு இருந்தது. அமித்ஷா என்றால் எல்லாம் தெரிந்தவர், சாணக்கியர், அவருக்கு எல்லா மாநிலங்களும் அத்துபடி என்று ஊடகங்கள் அவரை பூதாகரமாக்கி காட்டுகிறது. அவருக்கு முதலில் தி.மு.க. என்றால் என்ன மாதிரியான அரசியல் கட்சி என்பதே தெரியவில்லை. எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, தி.மு.க. தொண்டனாக அமித்ஷாவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் இன்னொரு குற்றச்சாட்டையையும் வைத்துள்ளார். ‘வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் வாரிசு அரசியலுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்’ என்று பேசி இருக்கிறார்.

மு.க.ஸ்டாலினாகிய என்னை அரசியல் வாரிசு என்று அமித்ஷா சொல்வாரானால்; ஆம்! நான் அரசியல் வாரிசு தான்! நான் கலைஞரின் மகன். இதை விட எனக்கு வேறு பெருமை தேவையில்லை. நான் அவரது ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு! முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கைக்கு, கோட்பாட்டுக்கு லட்சியத்துக்கு வாரிசு! ஆமாம், தி.மு.க.வில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது.

தந்தைப் பெரியாரின் கொள்கைக்கு வாரிசு நாங்கள்! பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு வாரிசு நாங்கள்! திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள்! 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ச்சமுதாயத்தின் விடியலுக்காக சமூகநீதியை உருவாக்கிய நீதிக்கட்சியின் வாரிசு நாங்கள்! பேராசிரியருக்கு, நாவலருக்கு, சொல்லின் செல்வருக்கு, புரட்சிக் கவிஞருக்கு, கலைவாணருக்கு, சிந்தனைச் சிற்பிக்கு வாரிசு நாங்கள்!

ஸ்டாலின் என்பது என்னுடைய தனிப்பட்ட பெயரல்ல. ஒரு இயக்கத்தின் பெயர். நான் தனிமனிதனல்ல! நான் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் தனிமனிதர்கள் அல்ல! நாங்கள் அனைவரும், ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள்! அதனால்தான் அமித்ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது.