அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப்.! அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டுகள்.! தரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகள்.!

0
Follow on Google News

மார்ச் மாத இறுதிக்குள் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்குட்பட்ட முதலிபாளையம் வீட்டுவசதி வாரிய பிரிவில், தரம் உயர்த்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக கல்வித்துறையில் பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் புரட்சிகரமான திட்டங்களை தாயுள்ளத்தோடு வழங்கியவர் அம்மா அவர்களே.அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும். 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள 3 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வித்துறைக்காக அதிகப்படியான நிதியினை வழங்கியவர் அம்மா அவர்களே. அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் முதலமைச்சர் எண்ணற்ற பல திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக கல்வித்துறைக்கென அதிகப்படியான நிதியினையும் ஒதுக்கி தந்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் பின்பற்றும் வகைளில் நமது கல்வித்துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியாகவும் மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியாகவும், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.