வீடில்லையா.? கவலையை விடுங்க, அனைவருக்கும் நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.!முதல்வர் உறுதி.!

0
Follow on Google News

வீடில்லாத அனைவருக்கும் நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசியதாவது:-எனக்கு முன்னால் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் குறிப்பிட்டதைப்போல, பட்டா இல்லாத மக்களுக்கு ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு பட்டா கொடுக்க வேண்டுமென்பதற்காக, 55,000 பேருக்கு பட்டாக்கள் கொடுத்தோம்.

அதைவிட, இந்த நகரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு கட்டுவதற்கு 1 சென்ட் நிலம்தான் கொடுத்தோம். அதை 10 நாட்களுக்கு முன்பு 2 சென்டாக உயர்த்தி உத்தரவை நாங்கள் வழங்கியிருக்கிறோம். கிராமத்திலிருந்து நகரம் வரை நிலமில்லாத ஏழை மக்கள், வீடில்லாதவர்கள், ஒட்டுமொத்தமாக விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழை மக்களுக்கு அரசாங்கமே சொந்தமாக நிலத்தை வாங்கி கான்க்ரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். நகரப்பகுதி மக்களுக்கு அடுக்குமாடி கான்க்ரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். இனி தமிழகத்தில் வீடு இல்லாதோர் இல்லை என்ற நிலையை நாங்கள் உருவாக்கித் தருவோம்.

இந்த பகுதி பின்தங்கிய பகுதியாக இருப்பதால் இங்கு வாழும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் கல்வியில் உயர வேண்டுமென்பதற்காக இங்கே ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று உங்கள் மாவட்ட அமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கு எங்களுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் சட்டம் பயில வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலித்து ஏறத்தாழ 7 சட்டக் கல்லூரிகளை கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்தது அம்மாவின் அரசாங்கம்.

ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளைக் கொண்டு வந்து வரலாற்று சாதனை படைத்துள்ளோம். ஆனால் ஸ்டாலின் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லையென்று பச்சைப் பொய் பேசுகிறார். அவர் வாயைத் திறந்தால் பொய், பொய்யை தவிர்த்து உண்மையே கிடையாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. அதேபோல, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நந்தன் கால்வாய் திட்டத்திற்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியது அம்மாவின் அரசுதான்.

விழுப்புரம், திண்டிவனம் இரண்டு நகராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுகிற அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம்தான். விழுப்புரம் நகராட்சி 100 ஆண்டுகள் கடந்த பழமையான நகராட்சியாக இருப்பதால் அங்கு பல்வேறு பணிகளை நிறைவேற்ற 50 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அவர்களே இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

பல்வேறு இடங்களில் சாலைகளை சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆரம்பப் பள்ளிகளை திறந்துள்ளோம். ஆரம்ப பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியதனால் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கிராமங்களிலிருந்து நகரம் வரை தமிழகத்தில் அதிகமானோர் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்துள்ளோம்.

ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெறவும், கிராமங்கள் வளர்ச்சி அடையவும், பொருளாதாரம் மேம்பாடு அடையவும் எங்கள் அரசு முன்னுரிமை கொடுத்து பல்வேறு சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.