கமல்ஹாசனிடம் மன்றாடினேன்.. தனது விலகல் குறித்து மகேந்திரன் பரபரப்பு தகவல்..

0
Follow on Google News

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியுள்ள மகேந்திரன் அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார், அதில், கோவை தெற்கு தொகுதியில் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் போட்டியிடும் முடிவில் இருந்த காரணத்தினால், குறைந்த பட்சம் தலைவர் அவர்களின் தொகுதியின் தேர்தல் களப்பிரச்சார பணிகளை சங்க்யா சொல்யூசன்ஸின் தலைவரிடமோ, தலைவரின் முக்கிய ஆலோசகரிடமோ கொடுக்க வேண்டாம் என்றும் நான் முன்னெடுத்துச் செய்கிறேன் என்றும் தலைவரின் வெற்றிக்கு நான் முழுப்பொறுப்பினை எனக்கு கொடுக்க வேண்டும் என்றும் நான் தலைவரின் மன்றாடினேன்.

ஏனெனில் ஏறத்தாழ 1 1/2 வருடங்களாக கட்சியினை பலவீனப்படுத்தி, கட்சியினரிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு, கோடிக்கணக்கில் செலவுக் கணக்கு காண்பித்து, மக்களிடம் இருந்தும் பெரும்பான்மையான கட்சியினரிடம் இருந்தும் உங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் உங்கள் ஆலோசகர்கள், கூட்டணியில் குழப்பம், தொகுதி பங்கீட்டில் குழப்பம், வேட்பாளர் தேர்வில் குழப்பம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குழப்பம் என்று தொடர் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சங்க்யா சொல்யூசன்ஸின் தலைவர் மற்றும் தலைவரின் ஆலோசகரின் கையில், தலைவர் அவரது தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரப் பணியினையும் இதர தேர்தல் பணிகளையும் ஒப்படைத்தால் இறுதியில் இங்கும் நமது வெற்றி வாய்ப்பு குறைவாகிவிடும் என்பதை தலைவரிடம் எடுத்துச்சொன்னேன்.

கோவை தொகுதி எனக்கு பரிச்சியமான தொகுதி என்பதால், அதில் என் தலைவருக்காக நான் சிரமேற்கொண்டு பணிபுரிவேன் என்று எடுத்துச்சொல்லப்பட்டும் எனது கருத்து கேட்கப்படவில்லை. இறுதியில் நான் பயந்தபடியே நடந்தது. பெருவாரியாக வெற்றியடைய வேண்டிய தலைவரின் வெற்றி வாய்ப்பு, இறுதியில் முக்கிய ஆலோசகர்கள் மற்றும் சங்க்யா சொல்யூஸன்ஸின் இயலாமையால் தலைவரை வெற்றியடைய விடாமல் செய்தது.

இவ்வளவு நடந்த பின்னரும் கூட தலைவர் பலமுறை கூறியபடி பிரச்சார அலுவலகமான சங்க்யா சொல்யூசன்ஸின் தலைவர் மற்றும் தலைவர் அவர்களின் முக்கிய ஆலோசகரையும் தேர்தல் முடிந்த பிறகாவது கட்சி விவகாரங்களில் தலையிடாமல் செயல்படுவார்கள் என்று நினைத்து ஒரு மாத காலமாகக் காத்திருந்தேன். ஆனால் தவறு செய்த சங்க்யா சொல்யூசன்ஸின் தலைவரும் தலைவரின் முக்கிய ஆலோசகரும், தங்கள் தவறுகளை மறைத்து, திசை திருப்பி அதை கட்சியினர் மற்றும் அதன் செயலாளர்களின் தவறு போல சித்தரித்து அதை தலைவரையும் நம்ப வைத்து இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கட்சியின் இத்துணை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்த மாறுபட்டு செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை, மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை. இந்த சூழல் தான் என்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக்கவனமாக எடுக்க வைத்திருக்கின்றது. ஏனெனில் ஒரு அரசியல் கட்சி என்பது சாமனியர்களின் கட்சியாகவும், ஜனநாயக முறைப்படியும், எதிர்க்கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், அமைந்திடவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்ட நான்,

நமது கட்சியில் இருந்து விலகிச்செல்லும் இந்நேரத்தில் கூட, தலைவர் கமல் ஹாசன் அவர்கள் தனது இந்த தன்னிச்சையாக முடிவெடுக்கும் போக்கினையும், சங்க்யா சொல்யூசன்ஸ் என்கின்ற நிறுவனத்தையும், அதன் ஆலோசகர்களையும் மட்டும் நம்பி, கட்சி உறுப்பினர் அனைவரின் மீதும் களங்கத்தை ஏற்படுத்தி, பலிகடாவாக ஆக்கும் அணுகுமுறையில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் செல்கின்றேன். நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியே செல்வதற்கு எனது கட்சியின் கதவைத் திறந்தே வைத்திருக்கின்றேன் என்று தலைவர் கமல் ஹாசன் அவர்கள் சமீபகாலத்தில் பலமுறை கூறியுள்ளார்.என தனது விலகல் குறித்து மகேந்திரன் தெரிவித்துள்ளார்.