மீண்டும் கொரோனா பரவல்..!இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் ரத்து.!

0
Follow on Google News

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் (டிசம்பர் 22) முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். புதிய வடிவில் கொரோனா தொற்று ஒரு சில நாடுகளில் பரவி வருவதையடுத்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் கொவிட்-19 பரவும் சூழல் நிலவுவதால், அந்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் வரும் 31-ஆம் தேதி இரவு 23:59 வரை தடை விதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடை 22-ஆம் தேதி இரவு 23:59 மணியிலிருந்து அமலுக்கு வரும். எனினும், சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் போக்குவரத்துத் துறை இயக்குனரகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது.

மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள், இங்கிலாந்திலிருந்து பயணிகள் யாரையும் நம் நாட்டிற்கு அழைத்து வரக்கூடாது. இங்கிலாந்திலிருந்து இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயணிகள் அழைத்து வரப்பட வில்லை என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களின் (ஏற்கனவே புறப்பட்ட விமானங்கள், 22ஆம் தேதி இரவு 23:59 மணிக்குள் இந்தியாவிற்கு வரும் விமானங்கள்) பயணிகளையும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கான மருத்துவ செலவுகளை ஏற்க வேண்டும்.