தீவுக்குள் தப்பி ஓடிய மியான்மர் நாட்டினர் 4 பேரை இந்திய கடலோர காவல் படை மடக்கி பிடித்தது.!

0
Follow on Google News

இந்திய கடல் பகுதியில் அந்தமான் பேரன் தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன்பிடித்த மியான்மரைச் சேர்ந்த 4 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்தது. இந்திய கடலோர காவல் படை கப்பல் ராஜ்ஸ்ரீ, கடந்த 2ம் தேதி அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பேரன் தீவு அருகே ஒரு மீன்பிடி படகு தென்பட்டது.

அந்த படகை தொடர்பு கொள்ள கடலோர காவல் படையினர் முயன்றனர். ஆனால் அந்த படகில் இருந்தவர்கள் பதில் அளிக்காமல், பேரன் தீவின் கரையில் படகை மோத செய்து, தீவுக்குள் தப்பி ஓட முயன்றனர். கடலோர காவல் படையினர், அவர்களை விரட்டிச் சென்று 2 பேரை கைது செய்தனர். மற்ற இருவர் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். அந்த படகில் இருந்து கடல் வெள்ளரி, ஆமை ஓடு, சங்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

காட்டுக்குள் தப்பியவர்களில் இருவர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மேல் விசாரணைக்காக போர்ட் பிளேயர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் சிலர் அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை பிடிக்க உள்ளூர் போலீசாருடன் இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில், சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை 2வது முறையாக இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.