இதற்கு முன் எந்த மருத்துவர் எந்த நீட் எழுதித் தேர்வானார் ? சூர்யாவுக்கு ஆதரவாக கவிஞர் தாமரை…

0
Follow on Google News

அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக நீதிக்கு எதிரானது.மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை. என நடிகர் சூர்யா தனது அறிக்கையின் வாயிலாக நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் நிலவி வரும் நிலையில், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை ஆதரவு தெரிவித்துள்ளார், அவர் தெரிவித்துளதாவது. ‘நீட்’ உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வும் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. 12 வகுப்பு வரை படித்து, 12 ஆம் வகுப்பில் கடினமான பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அதுவே போதுமானது.

மருத்துவத்தில் சிறந்த தமிழ்நாடு என்றுதான் நாடெங்கிலுமிருந்து இங்கே சிகிச்சைக்கு வருகிறார்கள். இங்கே இதற்கு முன் எந்த மருத்துவர் எந்த நீட் எழுதித் தேர்வானார் ?. 12 ஆம் வகுப்பில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற குழந்தையை, சிறந்த மருத்துவராக்க முடியும். தனியார் மருத்துவக் கல்லூரிகள், நன்கொடை, கொள்ளை கட்டணம், ஊழல், கல்வித் தந்தைகள், கல்வி வணிகம் போன்ற சீர்கேடுகளைக் களைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதற்கு சிறந்த பொறிமுறை கொண்டு வாருங்கள், முறைகேடுகளின்றி சேர்க்கை நடத்துங்கள். அது ஓர் அரசின் தலையாய கடமை !. ஆனால் முறைகேடுகளின் சுமையை மாணவர்கள் மேல் சுமத்த முடியாது. உங்கள் ஊழல்களுக்கு அவர்கள் விலை தர முடியாது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருவதாக உணர்கிறேன். நல்ல பொறிமுறையை நிறுவுங்கள். குழந்தைகளை பெரியவர்களின் பேயாட்டத்திலிருந்து விடுவியுங்கள். நடிகர், கல்விப் பணியாளர் சூரியாவின் கருத்தை ஆதரிக்கிறேன். உடன் நிற்கிறேன்.என தெரிவித்துள்ளார்.