இந்திய கிரிக்கெட் ஜெர்சியில் காவி… என்ன நடக்கிறது இந்திய அணியில்.?

0
Follow on Google News

டி20 உலகக் கோப்பை 2024 இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 3வது வீரராக களமிறங்க விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடுவரிசைக்கு பலம் சேர்க்க ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர ஜடேஜா, அக்ஸர் உள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளோடு சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஜூன் 5ம்தேதி அயர்லாந்துடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது. அதன்பின், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தானுடனும் அதைத் தொடர்ந்து 12-ம்தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடா அணியுடனும் இந்திய அணி மோதுகிறது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இஷாந்த் கிஷன், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்ராஜ் மற்றும் நடராஜன் ஆகியோர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தச் சூழலில் இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் அறிமுகம் செய்துள்ளது. தரம்சாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் கேப்டன் ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் முன்னிலையில் இந்த புதிய ஜெர்சியை விமரிசையாக அறிமுகம் செய்யப்பட்டது.
ஹெலிகாப்டரில் ராட்சத இந்திய அணி ஜெர்சியை பறக்கவிட்டப்படி மாஸாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வீடியோவை அடிடாஸ் நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் இந்த புதிய டி20 ஜெர்சி நீலம் மற்றும் காவி நிற கலவையில் வெளியாகி உள்ளது. ஒரே நாடு ஒரே ஜெர்சி என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். புதிய ஜெர்சியில் கழுத்துப்பகுதியில் மூவர்ணக் கொடியும்,  வலது மார்பு பக்கம் பிசிசிஐ இலச்சினையும் இடம்பெற்றுள்ளது. வழக்கமாக  நீல நிறத்தில் இருக்கும் இந்திய ஜெர்சியில் தற்போது ஆங்காங்கே காவி நிறமும் புகுத்தப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை ஜெர்சியில் நீல நிறம் தான் அதிகளவில் இருந்தது. காவி மற்றும் பச்சை மிக குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போது 2024 ஆம் ஆண்டுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட டி20 ஜெர்சியில் காவி நிறம் அதிகமாக இருக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சி இன்று 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைன் மற்றும் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீலம் நிறம் தானே. அதை இப்படி காவி நிறத்துக்கு மாற்றி விட்டார்களே என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கினர். இது பார்ப்பதற்கே நல்லா இல்லை என்றும் பழையபடியே நீல நிற ஜெர்சிக்கு மாற்றுங்கள் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த காவிநிற ஜெர்சியை வைத்து பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் உலா வர தொடங்கி விட்டன. இதற்கு பாஜகவே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். தற்போதும் இந்திய அணி ஜெர்ஸியில் மீண்டும் காவி நிறம் அதிகரித்துள்ளதற்கு, பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷாவே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here