உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பல பான் இந்திய நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் சொல்லும் முதல் விஷயம் என்னவென்றால், இது முழுக்க முழுக்க தளபதி விஜய்யின் ஒன் மேன் ஷோ என்பதுதான். பழைய பாணியில் மாஸ், ஆக்ஷன், எமோஷன், நகைச்சுவை, டான்ஸ் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கலந்து ஒரு கமர்ஷியல் விருந்தாக படம் அமைந்திருக்கிறது என்று கூறுகின்றனர்.

குறிப்பாக விஜய்யின் அறிமுகக் காட்சி, அதனைத் தொடர்ந்து வரும் கொண்டாட்டப் பாடல், இடைவேளைக்கு முன் வரும் அதிரடி சண்டைக் காட்சி ஆகியவை திரையரங்கையே அதிரவைத்துள்ளது, அதேபோல், அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக சில முக்கியமான ஆக்ஷன் காட்சிகளில் வரும் பின்னணி இசை, ரசிகர்களை இருக்கையில் இருந்து எழுந்து ஆட்டம் போட வைக்கிறது.
இயக்குநர் எச். வினோத் வழக்கமான வில்லன் கதையை மட்டும் சொல்லாமல், அதற்கு ஒரு வித்தியாசமான நோக்கத்தையும் சேர்த்து திரைக்கதையை நகர்த்தியிருப்பது பாராட்டும் வகையில் உள்ளது. முதல் பாதி முழுவதும் மாஸ் தருணங்கள் நிறைந்த கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்துள்ளது என்பதே பலரின் கருத்து.
இடைவேளைக்கு முன் வரும் சண்டைக் காட்சியும், அதில் விஜய் பேசும் பஞ்ச் வசனமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சில காட்சிகளில் வேறு படங்களின் சாயல் தென்படுகிறது. அதை எச். வினோத் தனது பாணியில் மாற்றி அமைத்த விதம் ரசிக்கும்படியாக உள்ளது.
படத்தில் ‘CM விஜய்’ என்று வரும் டைட்டில் கார்டு திரையரங்குகளில் மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிறைச்சாலை சம்பந்தப்பட்ட காட்சிகளும், அதிரடி சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது.வில்லனாக நடித்துள்ள பாபி தியோல் தனது கதாபாத்திரத்தில் மிரட்டலாக தோன்றியிருப்பதாகவும், விஜய்க்கு சரியான எதிரியாக நடித்திருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ஆனால் இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது. சில காட்சிகள் தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ளன . வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் வலிமையாக எழுதியிருக்கலாம், சில விஎஃப்எக்ஸ் காட்சிகளின் தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை , குடும்ப உணர்வை மையமாகக் கொண்ட சில காட்சிகள் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற விமர்சனமும் உண்டு.
இருப்பினும், இந்த குறைகளை எல்லாம் தாண்டி படம் முழுவதையும் தளபதி விஜய்யின் திரை ஆளுமையும், அனிருத்தின் பின்னணி இசையும் தாங்கி நிற்கிறது. மொத்தத்தில், ‘ஜன நாயகன்’ படம் ஒரு மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னராக ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்து என்றாலும் திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பொதுவான ரசிகர்களிடம் படம் எந்த அளவுக்கு நீண்ட நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, வரும் நாட்களில் வெளியாகும் வசூல் மற்றும் மக்கள் வரவேற்பைப் பொறுத்தே தெரியவரும்.

