கைதான நடிகருக்கும் அமீருக்கு உள்ள தொடர்பு என்ன.?இந்தியாவை உலுக்கிய சர்வதேச போதை பொருள் கடத்தல்…

0
Follow on Google News

டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் சினிமா பிரபலங்களின் தலையீடுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக ஒரு ஆபரேஷனை தொடங்கியுள்ளனர். இந்த கடத்தலை முறியடிப்பதற்காகவே அமைக்கப்பட்ட டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை கடந்த நான்கு மாதங்களாக கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு நான்கு மாதங்களாக ஓயாமல் வலை வீசி தேடி வந்த அதிகாரிகளுக்கு அண்மையில் போதை பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக துருப்பு ஒன்று கிடைத்திருந்தது. அதாவது மேற்கு டெல்லி பகுதியில் உள்ள பஸாய் தாராப்பூர் என்ற பகுதியில் குடோன் ஒன்றில் போதைப்பொருள் மாஃபியா செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது.

இதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த குடோனுக்கு சென்ற அங்கிருந்தவர்களை அதிரடியாக கைது செய்தனர். அதுமட்டுமின்றி அங்கு இருந்து 50 கிலோ போதை பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி இதன் சர்வதேச மதிப்பு 2000 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதை எடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கைதானவர்கள் மூன்று பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. தொடர்ந்து நடத்தப்பட்ட மேல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன. இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டவர்கள் பற்றிய விவரங்களையும் அதிகாரிகள் வெளியிட்டனர்.

அதன்படி, சினிமா தயாரிப்பாளரும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை தலைவரும் ஆன ஜாபர் சாதிக், அரசியல் பிரமுகரான சலீம், மற்றும் மைதீன் என்பவர் கைதாகி உள்ளனர். இந்த மூன்று பேரும் கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் மைதீன் என்பவர் திரைப்பட நடிகராக உள்ளார்.

குறிப்பாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள மைதீன் இயக்குனர் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் படத்தில் நடித்து வருவதால், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவருக்கு அமீருக்கு என்ன தொடர்பு, இவர்களுக்கு இப்படி பழக்க ஏற்பட்டது என சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் இந்த கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து வருகின்றனர். ஆகவே இந்த கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்களை கைது செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.