சின்மயிக்கு போட்ட தடை… உடைத்தெறிந்த லோகேஷ்… நன்றி சொன்ன சின்மயி…

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் இன்னும் ஒரு வாரத்தில் திரையில் வெளியாக இருக்கின்றது. எனவே இதற்கான ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்ஸ், பாடல்கள், ட்ரைலர் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அறிவிப்புகளை கொடுத்து வரும் லியோ படக்குழு படத்தின் மீதான ஹைப்பையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இப்படத்தில் நடிகை திரிஷா விஜயின் ஜோடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரையில் விஜய்-திரிஷா ஜோடிக்கு கெமிஸ்ட்ரி அருமையாக இருக்கும் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதனாலேயே, கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என்று அடுத்தடுத்த படங்களில் இந்த ஜோடி இணைந்து ஹிட் கொடுத்தது. இப்போது சுமார் பதினான்கு வருடங்களுக்குப் பிறகு, லியோ படத்தில் விஜய்-திரிஷா ஜோடி இணைந்திருப்பதால், ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் மீண்டும் திரையில் ஜோடியாக பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மற்றொரு பக்கம், பெரும்பாலான படங்களில் நடிகை திரிஷாவின் கேரக்டருக்கு உயிர் கொடுக்கும் பாடகி சின்மயிதான் லியோ படத்திலும் டப்பிங் செய்துள்ளளார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. லியோ படம் அக்டோபர் 19-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பிரீமியர் ஷோ அக்டோபர் 18-ந் தேதி மாலையில் திரையிடவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதேசமயம், படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனியார் ஊடகங்களில் பேட்டிகளை கொடுத்து வருகிறார். அத்துடன் லியோவில் உள்ள பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அப்போதுதான் அவர் பாடகி சின்மயிக்கு வாய்ப்பளித்தது பற்றி உளறியிருக்கிறார். ஏற்கனவே, பல பிரச்சினைகளால் சின்மயி படங்களுக்கு டப்பிங் பேச டப்பிங் யூனியன் தடைவிதித்துள்ளது.

ஆனால், அந்தத் தடையையும் மீறி நடிகை திரிஷாவுக்கு டப்பிங் கொடுக்க வைத்துள்ளார். இது குறித்து இயக்குனர் லோகேஷ் பேசுகையில், ‘என் படத்தில் எப்போதும் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றதில்லை. எனக்கு ரொமான்ஸ் சீன் எழுதவும் வராது, ஆனால் லியோ படத்திற்காக கொஞ்சம் நல்லா ரொமான்ஸ் காட்சிகளை எழுதி இருப்பதாக எனக்கே தோன்றியது. அந்த காட்சியில் விஜய், திரிஷா இருவருமே சூப்பராக நடித்திருந்தார்கள்.

அந்த காட்சியில் திரிஷாவின் கேரக்டருக்கு உயிர் கொடுக்கும் வகையில், சின்மயியை டப்பிங் பேச வைக்க முடிவு செய்தேன்.” என்று கூறியுள்ளார். மேலும், ‘எனக்கு என் வேலை முடியனும் அதற்காக அவங்களை அழைத்து பேச வைத்தேன். அவங்களுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.எல்லா மொழிகளிலும் திரிஷாவுக்கு அவர் தான் டப்பிங் பேசி உள்ளார் ” என்று லோகேஷ் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, பாடகி சின்மயி X தளத்தில், “தடையை மீறி தனக்கு வாய்ப்பளித்த லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் லலித்துக்கு நன்றி” என்று ட்வீட் போட்டுள்ளார். இந்தத் தகவல் தீயாகப் பரவவே இதனால் லியோ படத்திற்கு என்ன பிரச்சினை வரப்போகுதோ என்று விஜய் ரசிகர்கள் பலரும் பரபரப்பாக உள்ளனர்.