சித்தார்த்தை பாதியிலே ஓட விட்ட கும்பல்… சத்தமே இல்லாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என சித்தார்த் ஓட்டம்..

0
Follow on Google News

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த், தனது முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான விருதையும் பெற்றார். அதனையடுத்து, ஆய்த எழுத்து படத்தில் நடித்த சித்தார்த்துக்கு தெலுங்கு சினிமாவில் ஏராளமான படவாய்ப்புகள் கிடைக்கவே நீண்ட காலம் தமிழ் சினிமாவில் இருந்து தள்ளியிருந்தார்.

பின்னர், காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH 4, காவியத் தலைவன், ஜிகர்தண்டா போன்ற படங்கள் மூலம் அவ்வப்போது தமிழ் சினிமாவில் தோன்ற ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிப் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்த சித்தார்த் பல்வேறு படங்களில் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இடாகி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிய சித்தார்த், தற்போது இயக்குனர் அருண்குமார் இயக்கிய “சித்தா” படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். இன்று பல்வேறு திரையரங்குகளிலும் சித்தா படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் ‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பங்கேற்ற நடிகர் சித்தார்த் படம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கும்பலாக உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர் ஆவேசமாக சித்தார்த்தை நோக்கி கன்னடத்தில் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செய்தியாளர் சந்திப்பில் இடையில் நுழைந்த கன்னட அமைப்பினர், “காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

கூட்டத்தினர் ஆவேசமாக கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து பொறுமையிழந்த நடிகர் சித்தார்த், நன்றி தெரிவித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் நடிகர் கன்னட மக்கள் சார்பில் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ள கருத்தில், நீண்ட நாட்களாக இருந்து வரும் காவிரிப் பிரச்சினையை தீர்த்து வைக்காமல் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பிகளை கேள்வி கேட்பதற்குப் பதிலாக சாதாரண மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வது சரியல்ல. மேலும், இந்த விஷயத்தில் ஒரு கன்னடராக மற்றும் அனைத்து கன்னட மக்களின் சார்பாக நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரபல நடிகர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.