மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் துவங்கப்பட்ட திரைப்படம் தான் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.
கடந்தாண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மளமளவென படப்பிடிப்பு முடிவடைந்து கடந்தாண்டே விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்தாண்டு இறுதியில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடிக்கின்றனர். நடிகை ரெஜினா கசெண்ட்ராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விடாமுயற்சி முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படம் என்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் வெளிநாட்டிலேயே நடத்தினர்.
இதற்காக கடந்தாண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டுக்கு சென்ற படக்குழு, அங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இடைவிடாது படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இந்தியா வந்த படக்குழு, பின்னர் மீண்டும் அங்கு சென்று எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தியது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய சமயத்தில் அங்கு மோசமான வானிலை காரணமாக ஷூட்டிங் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது.
இதனால் ஜனவரி மாத இறுதியில் மீண்டும் சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து ஒரு மாதம் ஆகியும் எஞ்சியுள்ள படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகாததால், விடாமுயற்சி திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி இருப்பதாக சர்ச்சை வெடித்தது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தையும் லைக்கா தயாரித்து வருகின்றது. ஒரே சமயத்தில் இரு மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருவதால் லைகா நிறுவனத்திற்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் லைகா தயாரிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் தொடர்ந்து வசூல் ஈட்டாமல் தோல்வியை கொடுத்து வரும் நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” படத்தை மட்டுமே பெரிதாக அந்த நிறுவனம் நம்பி வருவதாக கூறுகின்றனர். அப்பா ரஜினிகாந்தை வைத்து தரமான படத்தை கொடுக்கிறேன் என லைகா நிறுவனத்திடம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று “லால் சலாம்” படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றும் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் பல கோடிகள் அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இதைப்போலவே சர்ச்சையை கிளப்பிய நிலையில், சில ஆண்டுகள் அந்த படத்தை கிடப்பில் போட்டு வைத்தார் லைகா சுபாஸ்கரன். இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கும் தற்போது அதுதான் நிலைமை என அதிர்ச்சி கிளப்புகின்றனர். ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாபச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு மட்டும் தற்போது பணத்தை செலவு செய்து உருவாக்கலாம் என்கிற முடிவுக்கு லைகா வந்திருப்பதாக கூறுகின்றனர்.
எனவே விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்க தாமதமாகும் என்றே தெரிகின்றது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் துவங்க தாமதமாவதால் அஜித்தின் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். எனவே அஜித் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்குவதற்குள் தன் அடுத்த பட வேலைகளை துவங்க முடிவெடுத்துள்ளாராம். ஆதிக் இயக்கத்தில் AK63 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாக சொல்லப்பட்டது.