டாஸ்மாக் கடையில் தமிழனா? தமிழகத்தை வாழ வைக்கும் வடக்கனா? அட தமிழ்நாடடில் என்ன தான் நடக்கிறது..

0

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் இரண்டு தரப்பிற்கு இடையில் நடந்த பிரச்சனை தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, அதில் தமிழகத்தில் வேலை செய்யும் வட இந்தியர்கள் தமிழர்களை விரட்டி அடிக்கிறார்கள் என்கின்ற ஒரு தவறான செய்தி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. ஆனால் இந்த செய்தியின் உண்மை தன்மை என்ன என்பது குறித்து தெரியாமல், பலர் வட இந்தியர்களுக்கு எதிரான அவர்களின் வன்மத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் தமிழகத்தில் வட இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது, ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்பதை உறுதி படுத்திய திருப்பூர் போலீசார், டீ கடையில் இரண்டு தரப்புக்கு இடையில் நடந்த தகராறு தான் இந்த வீடியோ என விளக்கம் கொடுக்கப்பட்டது. திருப்பூரில் நடந்த இந்த சம்பவத்துக்கு பின்பு வட இந்தியர்களை தொடர்ந்து தவறாக சித்தரிக்கும் செயல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை வட இந்தியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒருபுறம் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வட மாநிலத்தவர்கள் முக்கிய பங்காற்றி வருவதையும் மறுக்க முடியாது. உலகிற்கே சோறு போட்டவன் தமிழன் என விவசாயத்தில் கொடி கட்டி பறந்த தமிழக விவசாய நிலங்களை பாதுகாக்கும் சூழல் கூட இன்று வட இந்தியர்களை நம்பி தான் உள்ளது.

விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் அதிக சம்பளம் கேட்கிறார்கள் என இன்று விவசாயத்தால் ஏற்படும் நஷ்டத்தை சரி செய்து கொள்ள முடியாமல் பல விவசாயங்கள் அழிந்து அது வீட்டு மனைகளாக மாறி வரும் இந்த சூழலில் தமிழகத்தில் அழிந்து வரும் விவசாயத்தை காக்கும் விதத்தில் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்கள் வட இந்தியர்கள். இது தமிழகத்தில் வீழ்ச்சியில் இருக்கும் விவசாயத்திற்கு உயிர் கொடுத்து வருகிறது.

இதே போன்று தமிழகத்தில் இயங்கி வரும் பல தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வட இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இயங்கி வரும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் வட இந்தியர்கள் வேலைக்கு வரவில்லை என்றால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இங்கே செயல்பட்டு கொண்டிருக்கும் பல தொழிற்சாலைகள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கும்.

அந்த வகையில் இன்று தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வருகின்றவர்கள் வட இந்தியர்கள். அதே போன்று தமிழர்கள் சோம்பேறியாகி விட்டார்கள், டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் அதனால் தமிழகத்தில் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டும் தவறு, தமிழ்நாடு பெருமளவு கல்வியறிவில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவெடுத்தது உள்ளது.

அது தான் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை, மேலும் கூலி வேலைக்கு செல்லும் தமிழர்கள் யாரும் குறைந்த சம்பளத்திற்கு செல்வது கிடையாது. கூலி வேலைக்கு செல்லும் தமிழர்கள் நாள் ஓன்று ஆயிரம் முதல் சம்பளம் வாங்கும் நிலையில் உள்ளார்கள். தமிழன் டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கிறான் அதனால் தான் வட இந்தியர்கள் தமிழகத்தை தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டும் தவறானது.

டாஸ்மாக் கடையில் நிற்கும் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு 500 முதல் 1000 வரை சம்பாதிக்கக் கூடியவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேலையில் இன்று தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வருவதும் வட இந்தியர்கள் எனபதை மறுக்க முடியாது. இந்த சூழலில் நடிகர் விஜய் ஆண்டனி சொன்னது போன்று வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும் நம்மைப் போல தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன் தான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என தெரிவித்துள்ளது போன்று அனைவரிடமும் நட்பு பாராட்டுவோம்..