அவரவர் பசியுணர்வுக்கேற்ற படிப்புகளைக் கொடுப்பதுதான் நியாயம்.! நீட் தேர்வு வைத்து அச்சுறுத்த வேண்டிய அவசியம் என்ன ? கவிஞர் தாமரை ஆவேசம்..!

0
Follow on Google News

நீட் போன்ற கல்லூரி நுழைவுத் தேர்வுகள் வேண்டாம் என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது. நீட் தேர்வு தொடர்பான விசாரணைக்குழு அறிக்கையில் நீதிபதி இராஜன் அவர்கள் சில தினங்களுக்கு முன் 86,000 க்கும் மேல் கருத்துகள் வந்துள்ளன, அலசியாராய கூடுதல் அவகாசம் வேண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். தரவுகளின் அடிப்படையில் வேண்டும் வேண்டாம் என்பது ஒருபுறமிருக்க இன்னொரு கருத்து பதியப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

10 ஆம் வகுப்பு வரை அடிப்படைக்கல்வி, 11,12 இல் பாடம்சார் (கணிதம், தாவர/விலங்கியல், வணிகவியல் இத்தியாதி) கல்வி கற்கிறார்கள் குழந்தைகள். 11,12 இல் கடுமையான பயிற்சி, 12 இல் பொதுத்தேர்வு… 12 இல் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரி நுழைவு …. இதுதானே இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது ?. இதில் வழக்கமாக மருத்துவம், பொறியியல் போன்ற பிரிவுகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு போட்டி, தள்ளுமுள்ளு ? கலைப் படிப்புகளுக்கு அவ்வளவு அச்சுறுத்தல் இல்லை ?

ஏனென்றால் மருத்துவம், பொறியியல் பாடங்கள் கடினமானவை, அதிக கவனம் கோருபவை. அதிலும் மருத்துவப் படிப்பு விளையாட்டில்லை, உயிர்காக்கும் படிப்பு என்பதால் !. +2 பொதுத்தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் தேவை மருத்துவப் படிப்புக்கே ! அடுத்து பொறியியல். இந்த 90 -100% மதிப்பெண்களை விளையாட்டுத்தனத்துடன் அணுகும் மாணவர்களால் எடுத்து விட முடியுமா ?. கடின உழைப்புடன் கூர்த்த மதியும் தேவைப் படுகிறது. மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்கும் நேரமும் ஆற்றலும் நினைவுத்திறனும் தேவைப் படுகின்றன.

இந்தக் குறைந்தபட்ச ஆற்றலோடுதான் அவர்கள் மருத்துவம்/பொறியியலில் நுழைகிறார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா ? மருத்துவமாயினும் பொறியியலாயினும் சட்டமாயினும் வணிகவியலாயினும் யாரும் பட்டப்படிப்பு முடிக்கும்போது முழுமையானவர்கள் அல்லர். ஐந்தாண்டு மருத்துவப் படிப்பு முடியும்போது அவர்கள் மருத்துவர்கள் அல்லர். மருத்துவப் படிப்பு என்றால் என்ன என்று அறிந்து கொண்டவர்கள். உடற்கூறு தெரியும், நோய்கள் தெரியும் மருந்துகள் தெரியும் உயிரபாயம் தெரியும் உளவியல் தெரியும் அறிமுகப் படிப்பு அவ்வளவுதான்.

பயிற்சி மருத்துவராக நுழையும்போதுதான் மருத்துவப்பணியில் கால் வைக்கிறார்கள். அதன்பிறகுதான் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். பல்லாண்டுகள் கழித்துதான் விரும்பிய பிரிவில் மருத்துவராக உருவெடுக்கிறார்கள். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் போன்ற பழமொழிகளெல்லாம் இதிலிருந்து முளைத்தவைதாம் !. பொறியியலும் அப்படித்தான். பூதியியல், வேதியியல், கணினி, பொறிமுறைகள், வடிவியல், உலோகம், கான்கிரீட், கம்பிகள், சூத்திரங்கள் இத்தியாதி…

அதன்பிறகு எந்த நிறுவனத்தில் வேலைக்கு போகிறோமோ அந்த நிறுவனத்தின் பொறியியலைக் கற்று அங்கே துவங்குகிறது பொறியாளர் பணி !. நான் பொறியியல் முடித்து வெளிவந்த போது மேற்குறிப்பிட்ட அறிமுகப் படிப்பாளர்தான் !. கோவையின் சிறந்த கொதிகலன் கட்டுமான நிறுவனத்தில் பணியிலமர்ந்த போது அங்கு பணிபுரிந்த திறனற்ற தொழிலாளியின் அறிவுகூட எனக்குக் கிடையாது. இரண்டாண்டுகள் பயிற்சிப் பொறியாளராகப் பணியாற்றிய பின்னரே நிறுவனத்தின் உற்பத்திப் பொருள் குறித்த அறிவு கிடைக்கப் பெற்றேன்.

எனவே ஒரு படிப்பு படிக்கத் தேவையானவை மதியும் அந்தக் குறிப்பிட்ட படிப்புக்கான பசியுணர்வும் (Appetite)தாம் !. நான், என் அண்ணன், தங்கை மூவரில் ஒருவரேனும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். ஆனால் மூவருமே பொறியாளர்களேயானோம். மருத்துவம் படிக்க மதிப்பெண் இருந்தும் எனக்கு அதில் துளிகூட ஆர்வமில்லை. எனவே மதிப்பெண்கள் இருந்தும் ஆர்வமில்லையெனில், யாரும் எதுவாகவும் ஆக முடியாது. ஆர்வம் மிகக் கொண்டிருந்து, பள்ளிப் பொதுத்தேர்வு கோரும் மதிப்பெண் பெற்றிருந்தால் யாரும் எதுவாகவும் ஆக முடியும்.

அந்த அடிப்படையில், 80% க்கு மேல் பெறுபவர்கள் கூரறிவு பெற்றவர்கள். தாங்கள் விரும்பும் பாடம் கிடைத்தால், பற்றிக் கொண்டு சரசரவென்று மேலே வந்து விடுவார்கள். அனிதா போன்ற கூரறிவு படைத்த குழந்தைகளெல்லாம் பிற்காலத்தில் சிறந்த மருத்துவர்களாகி இருக்க வேண்டியவர்கள் ! அவர்களையெல்லாம் நீட் போன்ற நுழைவுத்தேர்வு வைத்து அச்சுறுத்த வேண்டிய அவசியம் என்ன ? இழப்பு சமூகத்துக்குத்தான் !. தமிழகம் கல்வியில் சிறந்திருக்கிறது.கூர்மதி கொண்ட குழந்தைகள் ஏராளம். அவரவர் பசியுணர்வுக்கேற்ற படிப்புகளைக் கொடுப்பதுதான் நியாயம். சமூகத்துக்கு அதுவே இலாபமும் கூட என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.