திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.!

0
Follow on Google News

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குரும்பபட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு ஏப்.16-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து செப்டம்பர் 29-ம் தேதி இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட கிருபானந்தன் என்ற இளைஞரை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் மாநில அளவில் முடிதிருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழக உள்துறை செயலருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த பரிந்துரையை உள்துறை செயலர் பரிசீலனை செய்து சிறுமி வழக்கில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுப்பார் என்றும், அரசின் பதில் கடிதம் கிடைத்த பிறகு மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்துள்ளார்.