இந்துக் கோவில்களில் திருக்குறள் வகுப்புக்கள்… இந்து கோவில்கள் மீதான திராவிட வெறுப்பா.? டாக்டர் கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி.?

0
Follow on Google News

திருக்கோவில்களுக்குள் திருக்குறளா? ஆலயங்களுக்குள் (தென்)அரசுக்கு என்ன வேலை? என கேள்வி எழுப்பிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திருக்குறள்-திருவள்ளுவரை காவியும் ஆக்க வேண்டாம்; கருப்பும் ஆக்க வேண்டாம்! திருக்குறள்-திருவள்ளுவர் வாழ்க்கை வழிகாட்டிகள்! அவைகள் வாழவும்; மக்கள் மனதை ஆளவும் வழிவிடுங்கள்! என தெரிவித்துள்ளார், மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்துக் கோவில்களில் இனிமேல் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் போன்ற பக்தி வகுப்புக்களோடு திருக்குறள் வகுப்புக்களும் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். இந்த செயல் அவரின் திருக்குறள் மீதான அளவளாவிய பற்று என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இந்து கோவில்கள் மீதான திராவிட வெறுப்பு என்று எடுத்துக் கொள்வதா? எனத் தெரியவில்லை. இந்து வழிபாடுகளும், அதனுடைய கலாச்சாரமும், பண்பாடும் பன்னெடுங்கால பாரம்பரியம் கொண்டவைகள். அதன் மீது நம்பிக்கை வைப்பதும், வைக்காததும் தனி மனித விருப்பம்.

தங்கம் தென்னரசு அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இல்லாமல் இருந்தால் அவர் கூறுவதை யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள்; பொருட்படுத்தவும் மாட்டார்கள். ஆனால் அவர் தற்போது தமிழ் மாநிலத்தின் ஒரு துறையின் அமைச்சராக இருக்கிறார். அவர் பேசும் பேச்சுக்களுக்கும், அவரது அறிக்கைகளுக்கும் ஒரு செயல் வடிவம் கொடுக்கப்படும். அவரின் கருத்து இந்த மாநில அரசின் கருத்தாகவே கொள்ளப்படும்.

எந்தவொரு அரசும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிட்டு எந்தவொரு ஜாதி, மத, இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, மத நம்பிக்கையிலிருந்து அரசு முற்றாக விலகியே இருக்க வேண்டும் என்பதே அரசியல் சாசன விதி. கோவில்களின் சொத்துக்களையும், உடைமைகளையும் அரசின் ஒரு துறையின் கீழ் கொண்டு வருவது என்பது வேறு; மத நம்பிக்கையில் அரசு தலையிடுவது என்பது வேறு. தேவாரம், திருவாசகம் என்பன முழுக்க முழுக்க சமயம் சார்ந்த நூல்கள். அவை கோவில்களில் பாடுவதற்கு என்றே சமயக் குரவர்களால் உருவாக்கப்பட்டவை. அவைகளை பாடுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது.

ஆனால், திருக்குறள் என்பது எச்சமயத்தையும் சாராத ஒரு பொதுமறை நூல் ஆகும். அறம், பொருள், இன்பம் என உலக மாந்தர்களிடையே ஒரு பொது ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்த திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைக் கூட, அது ஒரு வாழ்க்கை கல்வி; ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதன் முழு அம்சத்தையும் முழுமையாகத் தெரிந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு கூட பள்ளிகளில், கல்லூரிகளில் காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுப்பதில்லை. அப்படி இருக்கையில் திருக்குறளை கோவில்களில் போதிப்பது என்பது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்?

திருக்குறளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கம் நல்ல நோக்கமாக இருப்பின் அதற்கான செயல் திட்டங்கள் நன்றாக இருக்க வேண்டும். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா கிராமங்களிலும் ’ஐயன் திருவள்ளுவர் படிப்பகத்தை’ உருவாக்க முயற்சி எடுத்தீர்கள். திருவள்ளுவர் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்; அவரை ’ஐயன்’ என்று அழைக்கக்கூடாது எனச் சுட்டிக் காட்டியவுடன் திருவள்ளுவரையே விட்டுவிட்டீர்கள்.

இப்பொழுது திருவள்ளுவரையே நேராகக் கோவிலுக்குள் கொண்டுபோய் வைக்கிறீர்கள். ’மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’ என்ற மிக உயரிய கருத்துக்களைச் சொன்ன திருவள்ளுவரையும், திருக்குறளையும் நீங்கள் இந்து கோவில்களில் கொண்டு செல்வது திருவள்ளுவரையும், திருக்குறளையும் அவமதிப்பதற்குச் சமம்; வேண்டாம் இந்த விபரீதம். அன்பு சகோதரர் தங்கம் தென்னரசு அவர்களே, ‘Charity Begins At Home’ என்று சொல்வார்கள். திருக்குறளை முதலில் அனைத்து கழக கண்மணிகளிடத்திலும் கொண்டு செல்லுங்கள்;

ஜாதி, மத, இன உணர்வுகள் இல்லாமல் நல்ல மனிதர்களாக உண்டாக்கும் பட்டறைகளாக மாற்றிக் காட்டுங்கள். அதைத் தமிழகமும், இந்தியாவும், உலகமும் பின் தொடரட்டும். அதுவே, திருக்குறளை உலகறியச் செய்யும் செயலாகும். அதை விட்டுவிட்டு திருக்குறளை கோவில்களுக்குள் கொண்டு சென்று மதம் சாரா அறநூலை மறைநூலாக்க முயற்சி செய்யாதீர்கள்! திருக்குறள்-திருவள்ளுவரை காவியும் ஆக்க வேண்டாம்; கருப்பும் ஆக்க வேண்டாம்; (மறைமுகமாக) திராவிடமும் ஆக்க வேண்டாம்! திருக்குறள்-திருவள்ளுவர் வாழ்க்கை வழிகாட்டிகள்! அவைகள் வாழவும்; மக்கள் மனதை ஆளவும் வழிவிடுங்கள்! என புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர்,டாக்டர் க. கிருஷ்ணசாமிதெரிவித்துள்ளார்.